ஆசை முகம் மறந்து போச்சே…

சிரிப்பதை மறந்து விட்டிருந்தாள். உதட்டின் வளைவுகள் எப்போதும் சிரித்த படியே இருக்கும். அதை கவலையாக வைத்துக்கொள்ள மாட்டாள். அவள் முகத்தில் கவலைக்கான ரேகை எதுவும் இருக்காது. அவளைப்போல சந்தோசமான ஒருத்தி இருக்கவே முடியாது என்பது எல்லாருடைய அபிப்பிராயமும். உண்மையில் அப்படி எதுவும் அல்ல. அவள் உதட்டோர புன்னகையை கவனித்தவர்கள் கண்ணிலே உள்ளவற்றை கவனிக்க மறந்து விட்டிருப்பார்கள். அவள் கண் சிரிப்பது எப்போதோ விட்டுப்போய் இருந்தது. அவள் சிரிக்கையில் கன்னத்தின் குழிகள் அவ்வளவு அழகாக இருக்கும். கன்னமெல்லாம் சிவந்து கண்கள் மின்னும். இப்போதெல்லாம் கன்னக்குழிகளை பார்க்கவே முடிவதில்லை. கன்னம் சிவப்பதுமில்லை. கண்களில் முந்திய பிரகாசம் இல்லை. விபூதி குறிகளை மட்டுமே பிறைநிலா நெற்றி சுமந்து இருக்கும். சின்னதாக கரு மை இடப்பட்டு இருக்கும். அதுவும் பலபேரின் கட்டாயப்படுத்தல்களால். மை இட்டு இழுக்காத கண்களும் சாயம் பூசாத உதடுகளும் சோர்ந்து போய் இருக்கும். காதில் இரண்டு சாதாரண தோடுகள். முன்னரைப் போல கம்மல் எல்லாம் அணிவதில்லை. கழுத்தை வெறுமையாக விட்டிருந்தாள். சாதாரணமான சுடிதார்கள். ரெட்டை வண்ணங்கள் மட்டுமே இரு...