அவளதிகாரம் | பல்லவி

அந்த அதிகாலைக் குளிரில் அவனது உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது. எழுவதற்கென வைத்த அலாரத்தையும் அணைத்து விட்டு போர்வைக்குள் சுருண்டு கொண்டான். அவன் கைகளுக்குள் அவனுக்கு பிடித்தமான தலையணை. நன்றாக பருத்தி பஞ்சுகள் திணிக்கப்பட்டு பருமனாக இருந்தது. அணைத்துக் கொள்வதற்கு வசதியாக. மிருதுவாகவும் கூட. தறிகெட்டு சுற்றி கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்தி விட அவனுக்கு மனமில்லை. அவனைப் போர்த்து இருந்த கம்பளி போர்வை வேறு வெகுவாக இதமளித்து கொண்டு இருந்தது. அந்தக் குளிரை ரசித்தபடி உறங்கி விட்டிருந்தான்.

அவனுடைய படுக்கையறையில் அவள் நின்று கொண்டிருந்தாள். கையில் தேநீர் கோப்பையுடன். அவன் நித்திரை இன்னும் கலையவில்லை. மேசைமேல் கோப்பையை வைத்துவிட்டு திரைசீலைகளை அகற்றி விட்டாள். அவன் போர்வையை முகத்தில் இருந்து விலக்கி விட்டாள். சூரிய கிரணங்கள் அவன் முகத்தில் பட்டு அவனை கொஞ்சம் அழகாக காட்டியது. அவனுடைய வெண் தேகம் சூரிய ஒளியில் சற்று ஜொலித்து கொண்டிருந்தது. அவனை எழுப்புவதா இல்லையா என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க அமைதியாக அவனை ரசித்துக்கொண்டு இருந்தாள். நேரத்தை பார்த்தாள். ஏழு மணிக்கு இருபது நிமிடங்கள். அவனருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவன் தலைமுடியில் தன் கைகளை நுழைத்து வருட துவங்கினாள். அவன் போர்வையை முழுதுமாக அகற்றி விட்டாள். காலைக்குளிரில் அவன் மெலிந்த உடல் கொஞ்சம் சிரமப்பட்டது. கைகள் இல்லாத மேலாடை அவன் தோற்றத்தை இன்னும் மெலிவாக காட்டியது.

அவனுடைய அழைபேசி அலற தொடங்கியது. ஏழு மணிக்கு அவன் வைத்திருந்த அலாரம். யாரும் பிடித்த பாடலை அலாரமாக வைக்க மாட்டார்கள். அப்படி வைத்தால் நாளடைவில் அந்தப்பாடலும் வெறுத்து விடும் என்பார்கள். அவனும் பிடித்த பாடலை வைத்தது போல் தோன்றவில்லை. ஏதோ ஒரு ஆங்கிலப்பாடல். அதை அணைத்துவிட அவள் பிரயத்தனம் செய்தாள். பலனில்லை. அவன் அழைபேசியை கைகளில் எடுத்துக்கொண்டான். அவள் திடீரென்று அவன் தலைகளில் இருந்து கைகளை விடுவித்து கொண்டாள். நித்திரையில் இருந்து பூரணமாக அவன் விடுபடாத ஒரே காரணத்தால் அவன் அதை உணர்ந்து கொள்ளவில்லை. அவனருகில் அமர்ந்திருப்பது அம்மா என நினைத்து நித்திரை கலக்கத்தில் ஏதோவெல்லாம் உளறி விட்டு போர்வையை மறுபடியும் போர்த்திக்கொண்டான்.

அன்றைய தினம் அவனுடைய கல்லூரி விடுமுறை தினம். ஏதோ புரியாத காரணங்கள் எல்லாம் சொல்லி இருந்தார்கள். அவனுக்கு விடுமுறை என்பது மட்டும் நன்றாக ஞாபகம் இருந்தது. இன்று அதிகாலையில் எழும்ப தேவையில்லை என்று முடிவு எடுத்திருந்தான். அலாரத்தை மட்டும் நிறுத்திவிட மறந்திருந்தான். அதற்காக அதையும் சபித்து கொண்டான். அம்மாவிடம் என்று நினைத்து புலம்பியது எல்லாம் அலாரத்தை பற்றித்தான். அவள் அவனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவனுடைய ஸ்டோரி பதிவை பார்த்திருந்தாள். டோன்’ட் டிஸ்டர்ப் மீ. அப்போதே முடிவு எடுத்திருந்தாள் அந்த தேதியில் அவனை கட்டாயம் தொல்லைக்கு உள்ளாக்கியே ஆக வேண்டும் என்று.

அருள், குட் மோர்னிங்” கொஞ்சம் சத்தமாக போர்வையை விலக்கி கொண்டு கூறினாள். “குட் மோர்னிங் மா” என்ற படி போர்வையை இழுத்தான். அவனை தட்டியபடி “அருள், ஐ செட் குட் மோர்னிங்” என்றாள். கண்களை கசக்கி கொண்டான். தெளிவற்ற பெண்ணுருவம் ஒன்று அவன் தலையருகே அமர்ந்திருந்தது. “அம்மா…” என்றான். மறுமொழி இல்லை. ஒளி வரும் பக்கமாக அவள் அமர்ந்திருந்த காரணத்தால் அவள் முகம் அவனுக்கு தெளிவாக தெரிய நேரம் எடுத்தது. அந்த கண்கள் வெளிச்சத்துக்கு பழகவும் அவனை பார்த்து கொண்டு இருந்த கண்களை கண்டு கொண்டான். அது கனவா நனவா என அறிய அவன் தலைப்படவில்லை.

அவனுடைய கண்களால் அவளை வெறித்தான். பேச வார்த்தை இருக்கவில்லை அவனிடம். அவனுக்கு மிகவும் வசதியான கையில்லாத உடை ரொம்பவும் வசதி குறைந்தாற்போல் தோன்றியது. கால்சட்டை மிகவும் சிறுத்து விட்டது போல் உணர்ந்தான். ஒருபுறம் வெட்கம் அவனை சூழ்ந்து கொண்டது. பேச வார்த்தை வரவில்லை. போர்வை அவள் கைகளில் இருந்தது. கைகளால் தோளை தழுவி கொண்டான். அவன் நெளிவதை அவள் ரசித்து கொண்டிருந்தாள். அவன் சிவந்த தேகம் இன்னும் சிவந்து விட்டிருந்தது. வாய்பொத்தி சிரிக்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அவன் பாவமாக அவளை பார்த்தான். கண்களால் கட்டளை இட்டாள். கட்டளையை ஏற்றவன் போல் சத்தமின்றி குளியலறைக்குள் மறைந்து கொண்டான்.

அவனுடைய படுக்கை சீர் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரு சோடி புது துணி வைக்க பட்டிருந்தது. அவனுக்கு அவை பிடித்து இருந்தன. “பல்லவி, இவையெல்லாம் என்ன?” என்றபடி அவளிடம் சென்றான். “உடுத்திக்கொள், இந்தா இதை குடி முதல்ல” என்றபடி அவன் கையில் கோப்பையை திணித்தாள். அவளும் கையில் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டாள். அவனை அறையினுள் தள்ளிவிட்டாள். சீக்கிரம் ஆகட்டும் என்பது போல் நின்று கொண்டாள். கதவை சாத்திக்கொண்டான்.

அவள் வெளியே நின்று கொண்டிருந்தாள். கைகளில் தேநீர் கோப்பை. இருக பற்றி இருந்தாள். கோப்பையின் வழியே கைகளில் சூடு பரவ துவங்கியது. அவனை பார்க்க வேண்டி அவள் உள்ளே இருந்து உந்தப்பட்ட படி இருந்தாள். கதவினருகே செல்வதும் வருவதும் ஆக சிறிய போராட்டம் ஒன்று. கதவை வேகமாக தட்டிய படி திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். உள்ளே வராதே என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. கத்தவில்லை. சத்தம் வரவில்லை. ஜீன்ஸ் அணிந்து விட்டிருந்தான். “டேய் எவளோ நேரம்டா வெய்ட் பண்ணுறது” என்றபடி ஷேர்ட் பொத்தான்களை பொருத்தி விட்டாள். அவனருகில் அவள் இவ்வளவு நெருக்கத்தில் நின்றதில்லை. அவனுக்கு சந்திரமண்டலத்தில் மிதப்பது போல தோன்றியது. நீளக்கையை உருட்டிவிட்டாள். சரி போகலாம் என்று கூறி அவன் கைகளை பற்றிக்கொண்டு வீட்டை நீங்கினாள். வீட்டினுள் தனிமையில் இருக்கவே மனங்கள் வேண்டினாலும் இன்னும் ஏதோ ஒருதடை அவர்களினுள் உறுத்தி கொண்டு இருந்தது.

காலைநேரம் கூட்டம் அதிகமான சாலையில் நடந்து கொண்டிருந்தாலும் தம்மை சுற்றி எதுவும் இல்லாதது போல் தோன்றியது. மனிதர்கள் யாரும் இல்லை. சத்தங்கள் இல்லை. வாகனங்கள் இல்லை. அவர்கள் மட்டும் இருப்பது போல். அனைத்தும் அவர்களுக்கு என்பது போல். அவள் கைகள் அவனுடையதை வருட வேண்டி நின்றது. அவனருகே நெருங்கி சென்றாள். அவன் கையருகே தன் கையை கொண்டு சென்றாள். அவன் அறியாமல் கையை பற்றிவிட ரொம்பவும் பிரயத்தனம் செய்தாள். இயலவில்லை. நின்று நிறைய பேச வேண்டும் போல் இருந்தது. இயலவில்லை. ஏதோ ஒரு தயக்கம்.

அவள் கோயிலுக்குள் சென்று விட்டாள். அவனும் பின்னே சென்றான். நடமாடும் தெய்வமாக தோன்றினாள். கையெடுத்து கும்பிட தோன்றியது. அவள் பின்னே நின்று கொண்டான். அவளை சத்தம் இல்லாமல் தரிசித்து கொண்டான். அவளின் நீண்ட பிரார்த்தனை முடியவும் அவன் கண்களை மூடவும் சரியாக இருந்தது. அவளை மிஞ்சினால் போல நடித்து கொண்டிருந்தான்.

அவன் பிரார்த்தனையை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவ்வளவு குழந்தைத்தனம் இருவரிடமும். அவன் கண்கள் மூடி இருந்தாலும் அவள் அவனை பார்ப்பதை உணர்ந்திருந்தான். இன்னும் அதிகமாக பிரார்த்தனையில் ஆழ்ந்து கொண்டான். அவனுக்கு மட்டும் தான் ரசிக்க தெரியுமா என்ன? என்பதை போல் அவளும்.

அவள் கைகளால் சந்தனத்தை அவன் நெற்றியில் இட்டு விட்டாள். அவன் நிறத்துக்கு அந்த சந்தன குறி எப்போதும் எடுப்பாக இருக்கும். அவன் சந்தனத்தையே எப்போதும் விரும்பி இட்டுக்கொள்வான். நெற்றியில் அவள் கைப்பட்டதால் அவன் உடல் சில்லிட்டது. கண்களை திறந்தான். அவள் முகத்தின் பாவங்கள் திடீரென்று வெற்றாகி போயின.

திரைப்படமாளிகை அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தது. திரையிடப்பட்டு இருந்த அந்த படம் வெற்றிகரமாக மூன்று வாரங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டு இருந்தது. வாரநாட்களில் காலை நேரகாட்சிகள் ஓரிருவருக்காக மட்டும் ஓடிக்கொண்டு இருக்கும். அருள் ஏற்கனவே அந்த படத்தை பார்த்திருந்தான். பல்லவியை அந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தியும் இருந்தான். அவளும் இன்று நாளை என அதை பிற்போட்டுக் கொண்டே இருந்தாள். அவனை அந்த படம் ரொம்பவும் பாதித்து இருந்தது. அதை அவன் அவளிடமும் கூறி இருந்தான்.

அருகருகே பெரும்திரையை ரசிக்கும் படியாக வசதியாக அமர்ந்து கொண்டவர்கள் படம் திரையிடப்படும் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பேசுவதற்கு அவர்களிடம் நிறைய விசயங்கள் இருந்தது. யார் ஆரம்பிப்பது என்ற ஒன்று மட்டும் இருவருக்கும் இடையே கடல் போல் விரிந்து இருந்தது. கண்கள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டன. அவளுடைய கைகள் அவனுடையதை பற்றிக்கொண்டது. அவளுடைய வாய் குவிந்தது. கடல் சுருங்கி புள்ளியாய் போய்விட்டது போல் தோன்றியது. அந்த பெரிய திரை திறந்து கொண்டது. மாற்றங்கள் வினா. மாற்றங்களே விடை.

பேச எத்தனித்ததை பேசிவிட வேண்டும் என்று அவள் மனம் அடித்து கொண்டது. ஏதோ சொல்லவந்தவள் சொல்லிவிட மாட்டாளா என்று அவன் மனம் அடித்து கொண்டது. இதற்கும் மேலாக திரையில் ஓடிய அந்த காவியம் அவளை அதற்குள் கட்டிப்போட்டு விட்டது. சந்தர்ப்பங்கள் பிரித்து வைத்தவர்களின் கதை பேசும் அந்த காவியம். தேவதைகள் பெண்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாடி வைத்திட்ட ஆண்தேவதைகளும் இருக்கலாம் என்பதை அது காட்டி கொண்டு இருந்தது.

அவளுடைய ரசங்களை அமைதியாக ரசித்துக்கொண்டு இருந்தான். அவன் ஏற்கனவே பார்த்து விட்டிருந்த காரணத்தால் அவளை ரசிப்பதற்கு திரை தடையாக அமையவில்லை. அவள் உதட்டோர வளைவுகளும் விரிந்த கண்களும் குழிவிழும் கன்னமும் அவன் இருதயத்தை பிழிந்து கொண்டு இருந்தது. அவனுடைய உணர்வுகள் அவள் முன் எப்போதும் பூட்டி வைக்கப்பட்டே இருந்ததுண்டு. யாருமே இல்லாத தனிமையிலும் கூட அவன் உணர்வுகளை வெளிப்படையாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவள் கூறட்டும். அவள் கூறுவாள். அவள் தான் கூற வேண்டும் என அவளிடம் அனைத்தையும் விட்டு விட்டான்.

திரையில் விரிந்த அந்த கதையில் நாயகன் நாயகி இருவரும் ஒருமுறையேனும் தம் நேசத்தை வாய் திறந்து கூறியிருக்க மாட்டார்கள். பார்வைகள் வழியே அந்த பரிமாற்றம். காதலையும் தாண்டி ஒரு நீண்ட நிலைத்திருப்பை காட்டி இருப்பார்கள். படம் முடிகையில் நாயகனின் கண்களை நாயகி தன் கைகளால் மூடிக் கொண்டு அழுவாள். அவன் பார்வையை எதிர்கொள்ள அவளுக்கு தைரியம் இல்லை. ஒருநாள் பூராவும் பிடித்தவனுடன் இருந்து விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து போவாள். அவள் போய் ஆகவேண்டும். திரையில் தோன்றிய அந்த காட்சிக்கு அவள் கண்களெல்லாம் குளமாகிவிட்டிருந்தன.

பூங்காவின் நடை பாதைகள் வழியே நடைபழகினார்கள். வெயில் கொளுத்தி எடுத்தாலும் அவர்களை காக்கும் நோக்கில் விரிந்திருந்த மரங்களின் இடையே மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் ஒரு கொடியாகவே தோன்றினாள் பல்லவி. காலையில் பின்னியிருந்த முடியை அவிழ்த்து விட்டிருந்தாள். மெல்லிய காற்று அவள் முடியை கோதி அவளின் தேகம் வருடி சென்று கொண்டிருந்தது. காற்றுக்கு அவளை ரொம்பவும் பிடித்துவிட்டது போல. மறுபடி மறுபடி அவளை சீண்டி கொண்டே இருந்தது. அவனுக்கும் காற்றாய் மாறிவிட ஆசையாக இருந்தது. உருவம் விட்டு அருவமாகவாவது மாறிவிட தோன்றியது.

மழை பிடித்துக்கொண்டது. ரொம்பவும் நனைத்து விட்டிருந்தார்கள். வான் இருட்டி விட்டிருந்தது. சுடுகின்ற கோப்பி பானம் இருவரின் கைகளிலும் இருந்தது. அருள் கோப்பையை இடது கையில் பற்றி இருந்தான். வலது கையால் அணைத்து இருந்தான். மெல்ல கோப்பியை ரசித்து ருசித்து கொண்டிருந்தான். பல்லவியின் வலது கையில் இருந்த கோப்பை எடுப்பதும் வைப்பதுமாக இருந்து கொண்டிருந்தது. எடுக்கையிலும் வைக்கையிலும் அவள் அணிந்திருந்த அந்த காப்பு மேசையில் பட்டு ஒலி எழுப்பிய படி இருந்தது.

சூரியஸ்தமனம். கடற்கரையோரம். சமுத்திரகாற்று. உப்புவாடை. மணிரத்னத்தின் படத்தில் காட்டுவது போல் அமர்ந்திருந்தார்கள். பிய்த்து பிய்த்து நிறைய பேசி இருந்தார்கள் நாள் பூராவும். ஆனால் பேச வேண்டிய விசயம் ஏதும் பேசினாற்போல் தெரியவில்லை. அவனுக்கு அலைகடலை ரசிப்பது என்றால் அலாதி பிரியம். அஸ்தமனங்களில் ஆரம்பத்தை பார்ப்பவன் அவன். இரண்டும் இருந்தும் அவள் கால்களை அலைகடல் சுத்தம் செய்வதை ரசித்து கொண்டிருந்தான். அவள் காலடியில் இருந்து விட்டால் போதுமென எண்ணிக்கொண்டு இருந்தான். பேசிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான்.

அவனருகே இருக்க அவள் அவா கொண்டிருந்தாள். இருக்கவில்லை. நினைப்புகளை புதைத்து விட்டாள் அந்த மணலுக்கடியில். நினைவுகளை துறந்து விட முடிபு கொண்டாள். நனவாகும். நனவாக்க வேண்டும் என்ற உறுதியில் இயலாமையை கடலுடன் அனுப்பி விட கடலுடன் ஒரு ஆட்டம் ஆடி கொண்டு இருந்தாள். அஸ்தமனம் ஆரம்பமாகும் என எண்ணிக்கொண்டாள்.

புகையிரதம் ஆளே இல்லாமல் ஓடி கொண்டிருந்தது. இருவர் முகத்திலும் சூரியன் கிரணங்களை தூவி விட்டிருந்தான். தோடம்பழ நிறத்தில் முகம் ஜொலித்து கொண்டு இருந்தது. வாயிலில் ஒருவரை ஒருவர் பார்த்த படி நின்று கொண்டிருந்தனர். பல்லவி. அருள். அத்தனை தெளிவு இருவருக்கும் பிறந்து விட்டிருந்தது. இன்றே அனைத்தையும் பேசி தீர்ப்பது என்று. அருள் அவன் முடிகளை கோதி சரி செய்து கொண்டான். வலதுகையை மடித்து நேரம் பார்த்து கொண்டான். பல்லவி கண்களை மூடி ஏதோ ஏதோ வேண்டி கொண்டாள்.

“அருள், இன்னைக்கு இந்த விஷயம் பேசி முடிச்சிரனும்னு நினைக்கிறேன்”

“சொல்லு பல்லவி”

அவனுடைய அழைபேசி ஒலிக்கிறது.

“ஒரு நிமிஷம் பல்லவி”

ஜீன்ஸ் பையில் தேடுகிறான்.

“அருள், நான் உன்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன செஞ்சுட்டு இருக்க?”

“இரு பல்லவி பேசலாம் நிறைய பேசலாம்.  இந்த போன்அ கட் பண்ணிட்டு வாரேன். எங்க வெச்சேன் எண்டு தெரில”

அருகே இருந்த மேசையில் இருந்த அழைபேசியை எட்டி எடுக்கிறான். நிறுத்தி வைக்கிறான்.

“பல்லவி, சொல்லு இப்போ”

“பல்லவி, பல்லவி…”

கண்களை கசக்கி கொள்கிறான். கண் மங்கலாக தெரிந்தது. ரயிலை காணவில்லை. அவன் முன்னே நின்றிருந்த பல்லவியையும் காணவில்லை. அவன் இதயம் ஒலிக்கும் ஒலி அவன் காதுகளுக்கு கேட்டு கொண்டிருந்தது. அவனுடைய படுக்கையறை திரைசீலைகள் விலக்க பட்டிருந்தது. மேசையின் மேல் தேநீர் கோப்பையும் வைக்கபட்டிருந்தது.

“பல்லவி, பல்லவி” என்றபடி அறையை நீங்கினான். வீட்டில் யாரும் இருக்கவில்லை. அவன் கண்களின் ஓரம் ஒரு விரக்தி பற்றி எரிந்து கொண்டிருந்தது. இயலாமை ஒன்று அவனை சூழ்ந்து கொண்டது. தான் கண்டது கனவு என்பதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு தைரியம் இருக்கவில்லை. அறையில் வைக்கப்பட்டிருந்த கோப்பையை நெருங்கினான். காலையில் அவள் வைத்தது. தொட்டு பார்த்தான் ஆறிப்போய் இருந்தது.

நடந்தவற்றை நினைத்து பார்த்தான். அந்த கோப்பை தேநீரை அவன் குடிக்கவில்லை. புதிதாக மறுபடி தயாரித்த தேநீரை இருவரும் பருகினார்கள். அவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.

“அவள் வந்திருக்கிறாள்.  அது நிச்சயம்.”

“ஏதோ கதைக்கோணும் எண்டு சொன்னவள்.”

“அப்பிடி என்ன கதைச்சோம்?”

“ரயில்ல இருந்த நான் வீட்ல எப்பிடி?”

“புது ட்ரெஸ்?”

வீடு முழுவதிலும் தேடினான். அவள் அவனுக்கு அளித்த அந்த உடையை. உடுப்பு வைக்கும் அலமாரிகள். பெட்டிகள். கழுவும் எந்திரம். குளியலறை என மீண்டும் மீண்டும். எங்கும் அதை காணவில்லை. திரைப்பட டிக்கெட்டுகள் கோப்பி குடித்த பில் என எல்லாவற்றையும் தேடினான். இல்லை. அவைகளும் எங்கும் இல்லை.

அவனுடைய மூளைக்குள் மெதுவாக உண்மை உறைக்க தொடங்கியது. அவள். பல்லவி. அந்த நாள். கோவில். திரைப்படம். பூங்கா. மழை. கோப்பி. கடற்கரை. ரயில். அந்த நாளை மறுபடியும் ஓட விட்டு பார்த்துக் கொண்டான். தனக்குள் சிரித்து கொண்டான். தேவதையென அவன் வாழ்வினுள் வந்த அவளை நினைத்து கொண்டான்.

Comments

  1. Semmma sugan nallaa iruku rmba chinna chinna vishyam kooda mention paniruka naalllaa iruku

    ReplyDelete
  2. இது கனவு என்பதை என்னாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை 😭. இதை கதையாக ஏற்கவில்லை என் மனது.. நேரில் காணும் காட்சிகள் போல் இருந்தது ❤❤❤
    என் தம்பியின் சிறந்த முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அடுத்த தொடர் வரும் வரை காத்திருக்கிறேன்❤

    ReplyDelete
  3. தழிழை அழகாகக் காதலித்திருக்கிறீர்கள்...
    கதை அருமை என்று பாராட்டியிருக்கிறார்கள்... உண்மை தான் ஆனால் அதை விடவும் நிறைய அழகான தமிழ்ச் சொற்களை பாவித்தது தான் என்னை அதிகம் கவர்ந்தது. காட்சிகளை நகர்த்தும் சொற்களுக்கும் வலிமை இருக்க வேண்டுமல்லவா! அதற்காகவும் பாராட்டுகிறேன்... பல்லவி என்கிற பெயர் எனக்கு மிகவும் நெருக்கம்!
    இன்னொன்று அநேகமாக பெண்ணின் உணர்வுகளிலேயே முக்கால்பாகம் பேசப்படும் கதைகளுக்கு மத்தியில் ஒரு ஆணுடைய உணர்வுகளை, காதலை அது தரும் வெட்கத்தை பேசவைத்திருக்கிறீர்கள்... மிகவும் பிடித்தது...
    ஒரு பெண்ணாக, வாசகியாக இந்த எழுத்தாளனை இரசித்திருக்கிறேன்... பாராட்டுகிறேன்...!
    இன்னும் இது போல தொடர்ந்து தமிழைக் காதலியுங்கள்...

    அன்புடன்
    Elakshiya ♥✨

    ReplyDelete
  4. Semma semma..... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete
  5. Unexplainable emotion
    Solla vaarthaigaleh illa Anna
    Superb 👍👍

    ReplyDelete
  6. தாங்கள் உபயோகித்த பேச்சு தமிழ் மிகவும் Latest ஆன தமிழ்!! இக்கதையும் மொழிநடையும் நன்றாக அமைந்துள்ளன. எதிர்கால படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்.

    அன்புத்தம்பி,
    மயூரன் ஷர்மா.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் மட்டுமல்ல மெய்சிலிர்க்கும் தருணமும்.. கண்ணா என அழைக்கப்படும் எழுத்தாளர் சுகனிதனுக்கு என் வாழ்த்துக்கள்.. பல்லவி மற்றும் அருள் வாயிலாக ஒரு அழகிய பயணத்தில் வாசகர்களை அழைத்துச் சென்ற எழுத்தாளர் ... உணர்வுகளை தட்டி எழுப்பவும் தயங்கவில்லை,.. நிச்சயமாக என்னை ஈர்த்த அந்த அழகிய கதை பயணம் ❤super ...semma

    ReplyDelete
  8. நாம் இணைவதிற்கு சாத்தியமே இல்லை என்றும் தெரிந்தும் தினமும் தனது 'வாட்சப்பில்' காதலியை எண்ணி ஸ்டேட்டஸ் பதிவிடும் என் நண்பரை ஒரு நிமிடம் நினைவு படுத்திவிட்டீர் நகைப்பு என்னவெனில் அவருடைய பெயரும் "அருள்"

    இக் 'கனா'விட்கு அழகு சேர்த்தது இந்த இலகிய மொழிநடை என்று கூறினாள் மிகையாகாது என்றாலும் சில வரிகளில் திணிக்கப்பட்ட செயற்கை தமிழ் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

    "96" திரைப்படத்தை அட்லீ மீண்டும் எடுத்தால் போல் ஓர் உணர்வு. உமது தமிழ் அறிவும் ஆர்வமும் மெச்சப்பட வேண்டிய ஒன்று .

    ஒரு முழுமையான படைப்பாக,
    இது மிகவும் அருமையான பதிவு தோழி!!

    ~ இவ் பதிவை எனக்கு கொணர்ந்து சேர்த்த நேசிகனுக்கும் நன்றி

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்
    பலருடைய அனுபவங்களை ஒன்றாக சேர்த்து உருவாக்கியது போல் தெரிகிறது,என் அனுபவம் உட்பட. வர்ணனைகள் பிரமாதம்.
    உங்களுக்கே உரிய பாணி, அந்த தனித்துவத்தை விட்டு விடாதீர்கள். உங்களது நடையில் இணையும் காதல் கதையை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. Nan mulumaiyai vasikavellai vasitiddu solluran sellam nalla velai

    ReplyDelete
  11. தொடர்ச்சியாக status களில் பார்த்த share களைக் கண்டு ஒரு link இல் click செய்தேன். SLT announcement ஐயும் தாண்டி இறுதியாகத் தான் காண முடிந்தது பல்லவியை.
    உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் தான் சிறப்பு. நாயகிக்குக் காட்டியே ஆக வேண்டும் என்றவுடனும் புரிந்து கொண்டேன் 96 ஐப் பற்றித் தான் கூறுகிறீர்கள் என்று. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. எனக்கென்னமோ இதுல நடக்கிறது எல்லாம் உண்மையா நடந்த மாறியே ஒரு feeling..

    ReplyDelete
  13. Super sugan😍👌✌🔥 keep it up👏❤💚

    ReplyDelete
  14. Semma story brother idha novel la ezhudhunga break panni semmaya iruku

    ReplyDelete
  15. மொழிநடை சிறப்பாக உள்ளது. "அவளை மிஞ்சினால் போல நடித்து கொண்டிருந்தான்" இவ்வசனம் மிகச்சிறப்பு. தொடர்ந்தும் தங்களது கதைகளை எதிர்பார்த்த வண்ணம் - Kanistan

    ReplyDelete
  16. An unacceptable dream 😕 As it’s much lovely 😍♥️

    ReplyDelete
  17. Simple n superb da! 👏👌✍
    'பார்வைக்குள் புதைந்துபோன பரிமாற்றப் பாஷைகள் அர்த்தம் கொண்டு கடந்து போயின! கடந்த காலத்தின் மிக ஆழமான பதிவுகள் இன்னும் இதயத்தை நிரப்பி இடையிடையே வந்து போயின! வாழ்க்கை முதிரும் போதும் வசந்தங்களை மட்டும் சுமந்தபடி.......' 😍😍😍👍👌✍👏

    ReplyDelete
  18. ரொம்ப அருமைான எழுத்துநடை...... கடைசிவரை கனவு என்றே எண்ண முடியாதளவிற்கு இருந்தது கதை நகர்வு. கடலை ரசித்த விதம் மிக அருமை; ஏனெனில் கடலை அந்தளவிற்கு நேசிக்காமல் இருப்பது கடினம்...... அழகான வார்த்தைப் பிரயோகம். மேலும் மேலும் முன்னேறிவர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவளதிகாரம் | வேணி

முகாரி ராகம்

அப்பா..!

நீ பார்க்கும் பார்வைகள் 3

நீ பார்க்கும் பார்வைகள் 2