அவளதிகாரம் | வேணி
அந்த ஆட்டம் சுவாரசியமாக போய்க்கொண்டு இருந்தது. அவனுடைய அழைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரே ஒரு ஆட்டம். அமெரிக்காவின் பிரபலமான காமிக் நிறுவனத்தின் உடைமையாக இருந்தது அந்த ஆட்டம். அவனுடன் இருப்பவர்களால் அவனுக்கும் அவற்றில் ஆர்வம் நிறைந்து இருந்தது. அந்த காமிக் நிறுவனத்தின் கதைகளிலும் திரைப்படங்களிலும் அந்த கைபேசி விளையாட்டிலும் அண்மித்த காலங்களில் அதீத ஈடுபாடு உடையவனாகிவிட்டு இருந்தான். அதீத சக்தி வாய்ந்தவர்களை ஒன்றாக சேர்த்து எதிராளியை வெற்றி கொள்ளவேண்டும். விளையாட்டின் சாராம்சம்.
இரவு நீண்ட நேரம் கடந்தும் அந்த ஆட்டத்தில் மூழ்கிப் போய் இருந்தான். அந்த ஆட்டத்தில் இருக்கும் போதெல்லாம் அவனுடைய மற்ற தளங்களில் இருந்து கிடைக்க பெறும் அறிவித்தல்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுவிடும். இதனாலேயே ஆட்டம் முடிந்து நீண்ட நேரம் வரை பல பல சமாளிப்புக்கள், மறந்து விட்ட கதைகள், நாளாந்த சுவர் பதிவுகள் என நிறைய வேலைகள் மிச்சம் இருக்கும். அதற்குள் வீட்டில் இன்னும் சில நூறு பிரச்சினைகள். அதையெல்லாம் சரி செய்து நித்திரைக்கு செல்வதற்கும் அவன் பாடு பெரும் பாடு ஆகிவிடும்.
என்னதான் வாட்ஸ்ஆப் இன்ஸ்டாகிராம் என்றெல்லாம் வந்தாலும் நாளொருமுறை பேஸ்புக் சுவற்றில் உள்ள பதிவுகள் பார்வையிடாமல் நாளை நிறைவு செய்வதில்லை. வழக்கமாகவே கொண்டிருந்தான். அன்றைக்கும் ஆட்டத்தை முடித்து விட்டு வாட்ஸ்ஆப்பில் க்ஷேமங்கள் விசாரித்து இன்ஸ்டாகிராமில் விருப்புக்கள் கருத்துக்கள் எல்லாம் முடித்து கொண்டவன் அழைபேசியின் பேட்டரியின் அளவை பார்த்துக்கொள்ளவில்லை. அது நீண்ட உறக்கத்துக்கு போய்விட்டது. அதற்கான உணவை அதற்கு கொடுத்து விட்டு தனக்கானதை தானும் உண்டு விட்டு படுத்துக்கொண்டான்.
விளக்கை அணைத்துவிட்டான். கண்களை மூடிக்கொண்டான். நித்திரையை வேண்டினான். நாளைய தினத்தை நினைத்துக்கொண்டான். ஏதோ சரி இல்லை அவனிடம். புரண்டு புரண்டு படுத்தான். நித்திரை மட்டும் வரவில்லை. இரண்டு தலைவலி மாத்திரைகளை விழுங்கினான். தைலமும் தடவிக்கொண்டான். போர்வையால் நன்றாக தன்னுடலை மூடினான். தலையணை வாகாக அமையவில்லை என்றெண்ணினான் சரி செய்து மீண்டும் படுத்துக்கொண்டான். அந்தியில் கொஞ்சம் அயர்ந்திருந்தான். அதுவாகத்தான் இருக்க வேண்டும். முடிவு எடுத்துக்கொண்டான். அழைபேசி அந்த நேரத்தில் அவனுக்கு உதவும் நிலையில் இருக்கவில்லை. அது ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தது. அதற்கு அப்போது உணவும் ஓய்வும் தேவையென கருதி கொண்டான்.
மடிக்கணினி தொழிற்பாட்டில் இருந்தது. பேஸ்புக் அறிவித்தல்களை அவனுக்கு காட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக அறிவித்தல்களை வாசித்தபடி இருந்தான். பின்னணியில் ரஹ்மானின் பாடல் தெரிவு ஒன்று ஒலித்தது. அவனுடைய கண்கள் ஒருகணம் விரிந்து சுருங்கியது. கண்களை கசக்கி கொண்டான். உதட்டோரம் குறுநகை பூத்தது. மழைத்துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம், அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்… என அவன் காதுகளும் ஒலித்த பாடலின் வழியேயும் ஏதோ ஒரு உணர்வு ஊடுருவியதை அவன் உணர்ந்தான்.
யூ ஹாவ் எ நியூ பிரெண்ட் சஜெஸ்ஸன்: வேணி வெங்கட்
“வேணி… வேணி வெங்கட்” பெயரை கூறி பார்த்துக்கொண்டான். ஒரு சிறு தயக்கம் சூழ்ந்து கொண்டது அவனை. அவளுடைய நட்பு கோரி விண்ணப்பம் அனுப்ப அவனை உள்ளுணர்வு உந்தி தள்ளியது. கொஞ்சம் நிதானித்து கொண்டான். அடிக்கடி வேணி என்கிற பேரை உச்சரித்து கொண்டான். அடிக்கடி அவளை அவன் நினைத்தது உண்டு. எப்படி இருப்பாள்? என்ன செய்கிறாள்? என்றெல்லாம் நினைத்துக்கொள்வான். பேஸ்புக்கில் அவளை அவன் இன்னொரு முறை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுடைய பக்கத்தினுள் நுழைந்தான். முகப்புக்கான படம் நிழலுருவான பெண்ணொருத்தி. விவரங்கள் எதுவும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இது அவள் தான் என்பதற்கான எந்தவொரு தடயமும் அவ்விடம் இருக்கவில்லை.
அவன் மனதில் ஒரு விசயம். இன்றுவரை அவளிடம் சொல்லிவிடவில்லை என்று ஒரு உறுத்தல். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவளிடம் கூறிட வேண்டிநின்றான். ஆறாம் அறிவு வேண்டாம் என்று சொன்னது. மனம் வேண்டும் என்று நின்றது. பரிந்துரையை நிராகரித்துவிட எவ்வளவோ பிரயத்தனம் செய்தான். புத்தியும் மனமும் மோதிக்கொண்டால் மனம்தான் ஜெயிக்கும் என்று கூறுவார்கள். அவளுக்கு நட்பு வேண்டி கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
ராத்திரிகள் தோறும் அவளுடன் பேசி தீர்த்துவிட்ட அந்த நாட்கள் அவன் கண்முன்னே மின்னலாய் வெட்டிக்கொண்டு இருந்தது. அவள் யாரைப்போலவும் இல்லை. அவளை போல யாரும் இல்லை. வானத்து தேவதைகளில் இருந்து தப்பி வந்தவளாகவே அவளை பாவித்து இருந்தான். நண்பனின் வழியே அறிமுகமாகி இருந்தாள். வருடங்கள் சிலதுகள் கடந்து விட்டிருந்தாலும் நினைவுகள் அன்று போல் இன்றும் மாறாது பசுமையின் சாயலில் தெரிந்தது.
அவளை அவனுக்கு தெரியும் கொஞ்சமாக. நண்பன் கூறி இருந்தான். ஆனால் நெடு நாட்களாக அவளுடனேயே பேஸ்புக்கில் பேசி வந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கவில்லை. நண்பனின் கணக்கில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் அனைத்தும் அவள் விடுத்தவையே என்பதையும் அறிந்திருக்கவில்லை அவன். நடு ராத்திரிகள் தாண்டியும் சில நாட்கள் பேசியது உண்டு. பேச ஒன்றும் பெரிதாக இருந்துவிடவில்லை. ஆனாலும் நிறைய பேசி இருந்தார்கள் குறுஞ்செய்தி வழியாக.
‘அருள், நான் வேணி.’ என்று கூறி கொண்டு மறுபடியும் முதலில் இருந்து திரும்பவும் கதைக்க துவங்கி இருந்தாள். வேணியை ஏற்கனவே ஓரளவு அறிந்தவன் அருள் என்பதால் அவளை முழுதாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனிடம் இருந்தது. அன்றைய நாளைக்கு அவனுடன் பேசிய பெண்ணொருத்தி அவள் மட்டும் தான். அவனுக்கு அதில் ஒரு பெரிய திருப்தி. நண்பனின் வழியே அறிமுகமானவள் வேறு. பெண்களோடு பேசி அறிந்திருக்கவில்லை அதுவரை. அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பலவேளைகளில் முகமிகள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.
பேஸ்புக்கில் கதைக்க துவங்கிய காலங்களில் நிறைய நிறையவே கதைத்திருந்தார்கள். அவனைப் பற்றி அவனும் அவளை பற்றி அவளும். அவளைப் பற்றி அவன் கூறுமளவு அவர்களுக்குள் ஒரு பிணைப்பு வந்துவிட்டிருந்தது. விசைபலகைக்கு உணர்ச்சி இருந்தால் கதறி அழும். அவ்வளவு விசயங்கள் பேசி தீர்த்திருப்பார்கள். விசைபலகையில் பொதித்திருந்த எழுத்துக்கள் தேய்ந்து போய்விடும் அளவு பேசி இருந்தார்கள்.
எல்லாரையும் போல் அவனுக்கும் சில ஆசைகள் இருந்தது. அவளை பார்க்க வேண்டும் என்றும் அவளுடன் கதைக்க வேண்டும் என்றும் சின்னசின்ன ஆசைகள். அப்படி ஒரு நாளை எதிர்பார்க்க துவங்கி இருந்தான். பார்க்கும்போது அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும், என்ன என்னவெல்லாம் பேச வேண்டும் என்றெல்லாம் கற்பனைகளை பறக்க விட்டு கொண்டு இருந்தான்.
அவள் கண்கள் கயல் மீனினைப் போல் இருக்கும். இல்லை இரண்டு முட்டைகளை வைத்தாற்போல் இருக்கும். இல்லையில்லை கயல் மீனினைப் போல தான் கூர்மையாக இருக்கும். கரிய மைகொண்டு கண்களை இன்னும் கூர்மையாக்கி இருப்பாள். புருவம் இரண்டும் பிணைந்து ஒரே புருவமாக இருக்குமா? இல்லாவிட்டால் தனித்தனியாக பிரிந்து இருக்குமா?. கண்களை கொண்டு பாவம் காட்டுகையில் பாவத்துக்கு ஏற்றாற்போல் புருவமும் நிமிர்ந்து குனிந்து ரசங்கள் காட்டும். சிறிதாக அழகாக ஒரு மூக்கு, அதில் குத்திவைத்த மூக்குத்தி, சற்றே உப்பிய கன்னம், கன்னத்தில் குழி, ரோஜா பூ நிறத்தில் உதடுகள் அதனிடையே முத்து ஆரம் வரிசையாய் அடுக்கிவைத்தாற்போல் பற்கள். வரிசையாக வேண்டாம் இரண்டு தெத்துப்பல் இருக்கட்டும். ரோஜாப்பூ உதடுகள் கொண்டு சிரிக்கையில் கன்னத்து குழிகள் பார்ப்பவர்களை விழுத்தி விடும் என்ன?
நீண்டு நெடிந்த முடி கருநிறத்தில் அதை அள்ளி முடிந்திருப்பாள். இல்லாவிட்டால் பையனைப்போல் சிகை அலங்காரம் செய்திருப்பாளா?. பையனைப்போல் உடை அணிவாள் என்று கூறினாள் அல்லவா தலைமுடி குறுகலாக வெட்டப்பட்டிருக்கும். ஜீன்ஸ் நீளக்கை சட்டை போட்டுக்கொள்வாள். கண்களில் கண்ணாடி வேறு. கலர் கண்ணாடி. தோழில் சிறிய பை. பையை கைகளில் பிடித்து கொள்வாள் பேசும் போது. கைகளில் கடிகாரம். தன்னைப்போல் வலது கையில் அணிந்திருப்பாள்.
அவனை பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்வாள். நேராக அவனிடம் வந்து “அருள், நான் வேணி” என்று கூறுவாள். அவள் குரல் வெள்ளி பாத்திரத்தில் நீர் சொட்டுவதை போல் அவ்வளவு இனிமையாக இருக்கும். நிறைய பேசுவார்கள். நேரில் பார்த்துவிடும் போது அவளிடம் ஒன்றை கூறிவிட எண்ணி இருந்தான். அதை மறைத்துவிட அவன் மனம் இடம்கொடுக்கவில்லை.
இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டான். அந்த ஒருநாளுக்காக காத்திருந்தான். ஏற்கனவே நண்பன் வழியாக அறிந்திருந்த ஒரு விசயம். அதை மறந்துவிட்டிருந்தான். அதை பற்றி முன்னொருமுறை கதைத்துக்கொண்ட போது வேணியை அறிந்திருக்க மாட்டான். மறுபடியும் அந்த நண்பன் அதை நினைவுபடுத்தினான். அருளின் தலைக்குள் ஏதோ ஒரு உணர்வு. மூளை விறைத்து போனது. கைகள் சக்தியை இழந்து விட்டது. தொண்டைக்குழி பிடித்து விட்டாற்போல் ஒரு உணர்வு அவனுக்கு. அவளை இப்படியாக நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.
“அருள், வேணியால பேச முடியாது. சாட்டிங் கூட ரொம்ப கஷ்டப்பட்டு தான். ஆனா நாங்க பேசறது புரியும் அவளுக்கு.”
அருளால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரவு பகலாக அவன் பேசியவளால் பேச முடியாது என்பதை அவனால் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏன் அப்படி என்று அறிந்துகொள்ள ஒரு தூண்டல் இருந்தது. நண்பனிடம் கேட்டுவிட ஒருகணம் நினைத்தான். இல்லை வேண்டாம் என பின்வாங்கி கொண்டான். ஏற்கனவே அவன் கூறியவைகளை நினைத்து மறுமுறை மூளைக்குள் வாங்கிக்கொள்ள பிரயத்தனம் செய்தான். பிறவியில் வந்தது இல்லை என்பது மட்டும் ஞாபகத்துக்கு மறுபடி வந்து சேர்ந்தது.
தனக்கு கிடைத்த தோழியின் நிலை அவனை ரொம்பவும் வருத்தியது. இத்தனை பேர் இருக்கும் இந்த உலகத்தில் அவளுக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஆண்டவனை கேட்டுக்கொள்வான். பலர் பேச முடியாது இருப்பது அவனுக்கு தெரிந்தே இருந்தாலும் அவனால் அதை ஜீரணித்து கொள்ள இயலவில்லை. அவனுடைய வயதிற்கு நிறைய நிறைய யோசனைகள் வந்து போகும். வேணி தனிமையாய் உணர்ந்துவிட கூடாது என்று முடிவு கொண்டிருந்தான். எப்போதையும் விட அதிக நேரம் கணினியுடன் செலவு செய்ய துவங்கினான். சகிக்க முடியாத நகைச்சுவைகள் கடி ஜோக்குகள் என வரிசையாக அனுப்பி வைப்பான். அவள் சிரிக்க வேண்டும். சிரித்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தான். அவன் அதுவரை யாரையும் அவ்வளவு நேசித்து கிடையாது. ஒருத்தியை தவிர.
வேணியே சொல்லி இருக்கிறாள் “அருள், நீ கதைக்கும் போதெல்லாம் கவலை மறந்து சிரிக்க முடியுது.” கவலைப்படும் வயதில்லை அந்த வயது. இப்போது அவனுக்கு அது புரிகிறது. அப்போது அவனும் நிறைய கவலை பட்டு இருக்கிறான். அவளுக்காகவே நிறைய கவலைகள் எல்லையற்ற யோசனைகள். கண்ணீரும் கூட. தோழி என்பதை தாண்டி குழந்தை போல் பார்த்துக்கொள்ள வேண்டி நின்றான்.
அவளனுப்பும் குறுஞ்செய்திகளில் தெய்வத்தை பார்த்தது உண்டு. இன்றுவரை அவளை பார்த்தது கூட இல்லை அவன். அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனிடம் எழுந்ததுண்டு. ஆனால் அவளை நேரிடையாக சந்திக்கும் தைரியம் அவனிடம் இருக்கவில்லை. புகைப்படம் அனுப்ப சொல்லி பார்க்கவும் விரும்பவில்லை. ஒருத்தியிடம் புகைப்படம் அனுப்ப சொல்லி கேட்பது அவ்வளவு அழகும் அல்ல என்று அவனுக்கு தெரியும்.
இப்போது போல் அப்போதும் ராத்திரிகளில் உறங்கிவிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்வான். அப்போது அவன்கைகளில் அழைபேசி இருக்கவில்லை. இலத்திரனியல் திரைக்கு முன்னே இருந்துகொள்வான். அவளுடன் பேசுகையில் புன்னகை சிந்துவான். அப்போது வேறுயாரையும் அறிந்திராத படியால் அவளுடன் மட்டுமே அரட்டைகள் இருக்கும். அவளுக்கு கதைகள் கேட்பதென்கிறால் ரொம்பவும் பிடிக்கும். சொல்லப்போனால் இவன் கதைகளின் ஆரம்பம் அவளிடம் இருந்து தான்.
அவளிடம் அவன் படித்த கதைகள் பலவற்றை கூறி இருக்கிறான். ஒரு கதை வினையாகி போனது. அந்த கதையில் நேரிடையாக சந்தித்துக்கொள்ளாத இருவர் நண்பர்களாக இருப்பார்கள். அவர்கள் எழுத்துக்கள் வழியாக உரையாடுவார்கள். எழுத்துக்களை வாசிக்கையில்அவர்களில் ஒருவனுக்கு குரல் கேட்கும். அந்தக்குரல் அவ்வளவு உயிர்ப்புடையாதாக இருக்கும். வெள்ளிப்பாத்திரத்தில் தண்ணீர் கொட்டுவது போல. கதைநேர முடிவில் அவள் கேட்டது எல்லாம் ஒன்று தான்.
‘எனக்கென்றும் ஒரு குரல் இருக்கும் தானே உன்னட்ட. அந்தக்குரல் என்னோடது இல்லை. என்னோட ரியாலிட்டி எதுவோ அதை நீ பார்க்கல.’
‘வேணி, நான் சொல்ல வாரது ஏதும் புரிஞ்சுக்கல நீ’
‘இன்னும் ஒரு மாசத்துல வெளிநாடு போறன். இனிமே உன்னோட பிரெண்ட் ட அக்கௌன்ட் நான் பாவிக்க மாட்டேன். டேக் கெயார். தாங்க் யூ.’
‘வேணி…’
மறுமொழி வரவில்லை. தான் செய்த பிழைகள் புரிந்து கொண்டான். எதிர்பார்ப்புக்களால் இன்னொருவர் வாழ்க்கையை அவனால் வாழ முடியாது என்பதையும் புரிந்து கொண்டான். வெள்ளிப்பாத்திரத்தில் தண்ணீர் சொட்டும் குரல் மறைந்து விட்டது. உருவகித்து வைத்திட்ட தோற்றம் மறைந்து காற்றில் கைகளை ஆட்டி ஆட்டி அபிநயம் பிடிக்கும் நிழலுருவம் ஒன்று மட்டும் நிலை கொண்டது. அதுவும் அழகாக தான் இருந்தது. மீண்டும் வருவாள் என்று கொஞ்ச காலம் காத்திருந்தான். அவளிடம் சொல்ல நினைத்தவற்றை சொல்லியிருக்கலாமோ என்றெல்லாம் தோன்றியது. அவள் வெளிநாடு போய்விட்டாள் என்பதை நண்பன் வழியாக அறிந்து கொண்டான். நாளடைவில் பழகி போனது.
வருடங்கள் சிலவற்றுக்கு முன் நடந்தது இப்போது நடந்தது போல் இருந்தது அவனுக்கு. மடிக்கணினியை மூடிவைத்து விட்டு அழைபேசியை எடுத்துக்கொண்டான். அது உற்சாகமாக அவன் கைகளில் இருந்தது. நேரம் பிரம்ம மூகூர்த்ததை அடைந்திருந்தது. வெளியே வாகன சத்தங்கள் கேட்க துவங்கி இருந்தது. அயல் வீடுகளில் அன்றைய நாளுக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டிருந்தார்கள். முகத்தை கழுவி கொண்டான். திரைசீலைகளை மூடினான். படுக்கையில் சாய்ந்து கொண்டான். போர்வைக்குள் புதைந்து கொண்டான். படுத்ததும் அயர்ந்துவிட்டான்.
அவனுடைய அழைபேசியில் அறிவித்தல் ஒலி ஒலித்தது.
அருள்மொழி, வேணி வெங்கட் அக்செப்ட்டெட் யுவர் பிரெண்ட் ரிக்வெஸ்ட்.
உணர்ச்சி நரம்புகளை மெல்ல வருடும் கதையிது.
ReplyDeleteவேணி! அற்புதமான படைப்பு... எதிர்பார்ப்புக்கும்
நிஜமானதற்கும் இடையிலான மெல்லிய நூலிழை விளக்கம்.
அருள் பரிச்சயமாக இருக்கிறான். வேணியைப் பற்றிய அவன் எண்ணப்பாடுகள் அழகு.
என்னமோ தெரியவில்லை
மனதுக்கு நெருக்கமான பெயர்கள் வைக்கப்படுகின்றன கதாபாத்திரங்களுக்கு!
அருள் மாதிரியான ஆண்கள் இருந்தால் காதல் என்றும் உயிர்ப்புள்ளதாகவே இருக்கும். ஆணுடைய உணர்வுகள் பேசப்பட்டிருக்கின்றன...
வார்த்தைகளுக்கு வலிமை இருக்கிறது எப்போதுமே!
நல்ல உருவாக்கம்...
வேணியை அருளின் பார்வையில் சித்தரித்தது அமோகம்...
சேர்ந்தும் சேராத காதலின்
சுவடுகளில் தமிழை நடத்தியிருக்கிறீர்கள்.
எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்...
தமிழ் வாழ்க!
Elakshiya
❤
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதலாவதாகப் பதிய எண்ணிணேன். இரண்டாவது பதிவே சாத்தியமானது. பரவாயில்லை. எழுதி முடிப்பதற்குள் மூன்றாவது பதிவாகி விட்டது.
ReplyDeleteஅருள்மொழியின் கதை அற்புதமாக உள்ளது. இன்னும் பல படைப்புகளை எதிர்பார்த்த வண்ணம்...
அருள் உச்சரித்து பார்த்த "வேணிவெங்கட்" என்ற பெயர் இன்று எம்மவரையும் உச்சரிக்க வைத்துள்ளது என்பது அவளை எங்களில் உணர வைத்த எழுத்தாளரின் திறமை என்பது மறுக்க முடியாத உண்மை அதற்கு முதல் யாம் தலை வணங்குகிறோம்..... ��வேணியுடனான பயணத்தை சுவாரசியமாய் ஆரம்பித்து மனநிறைவுடன் முடிக்கவும் தவறவில்லை... இரண்டாவது முயற்சியும் vera level என்பது என் கருத்து ... அடுத்த வரவுக்காக காத்திருந்த எனக்கு மனநிறைவு... ❤
ReplyDelete💕💕💕
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteகாலங்கள் தாண்டினாலும் தான் கொண்ட காதல் கடிதமாக உரைக்காவிடினும் காலத்தினால் அழியாத உணர்வாள் உணர்த்தப்படும் என்பதே மீண்டும் ஒரு அறிவித்தல் ஒலிக்கு அவசியமே ......
ReplyDeleteஅனுபவத்தால் உணர்பவருக்கு சிறந்த படைப்பு தோழா.......
Tharamana padaipu anna.adutha padaipugana kaathirupu needikindrathu............
ReplyDelete