ஆசை முகம் மறந்து போச்சே…


சிரிப்பதை மறந்து விட்டிருந்தாள். உதட்டின் வளைவுகள் எப்போதும் சிரித்த படியே இருக்கும். அதை கவலையாக வைத்துக்கொள்ள மாட்டாள். அவள் முகத்தில் கவலைக்கான ரேகை எதுவும் இருக்காது. அவளைப்போல சந்தோசமான ஒருத்தி இருக்கவே முடியாது என்பது எல்லாருடைய அபிப்பிராயமும். உண்மையில் அப்படி எதுவும் அல்ல. அவள் உதட்டோர புன்னகையை கவனித்தவர்கள் கண்ணிலே உள்ளவற்றை கவனிக்க மறந்து விட்டிருப்பார்கள். அவள் கண் சிரிப்பது எப்போதோ விட்டுப்போய் இருந்தது. அவள் சிரிக்கையில் கன்னத்தின் குழிகள் அவ்வளவு அழகாக இருக்கும். கன்னமெல்லாம் சிவந்து கண்கள் மின்னும். இப்போதெல்லாம் கன்னக்குழிகளை பார்க்கவே முடிவதில்லை. கன்னம் சிவப்பதுமில்லை. கண்களில் முந்திய பிரகாசம் இல்லை.

விபூதி குறிகளை மட்டுமே பிறைநிலா நெற்றி சுமந்து இருக்கும். சின்னதாக கரு மை இடப்பட்டு இருக்கும். அதுவும் பலபேரின் கட்டாயப்படுத்தல்களால். மை இட்டு இழுக்காத கண்களும் சாயம் பூசாத உதடுகளும் சோர்ந்து போய் இருக்கும். காதில் இரண்டு சாதாரண தோடுகள். முன்னரைப் போல கம்மல் எல்லாம் அணிவதில்லை. கழுத்தை வெறுமையாக விட்டிருந்தாள். சாதாரணமான சுடிதார்கள். ரெட்டை வண்ணங்கள் மட்டுமே இருக்கும். கல்வைத்த அலங்காரங்கள் எல்லாம் இல்லை அதில். கைகளுக்கு கடிகாரம் மட்டும். அதுவும் வலதுகையில். இடதுகை பெருவிரல் நகம் மட்டும் கொஞ்சம் பெரிதாக வளர்த்திருந்தாள். அதன் நுனியில் மட்டும் மெல்லிய ஆரஞ்சு நிறம் படிந்திருந்தது. எப்போதோ என்றோ இட்ட மருதாணி சாயம்.

கருநிற கூந்தலை கைகளால் அழைந்து கொண்டு இருந்தாள். எண்ணெய் தடவி இருந்தாள். எண்ணெய் வேர்களில் ஊறிவிட வேண்டி அந்த அழைதல் தொடர்ந்தது. அவள் அழைபேசி கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த காலத்து பாடல்களை ஒலிக்க விட்டிருந்தாள். அவளுக்கு இப்போதெல்லாம் பழமைகள் மீது அலாதி பிரியம். அவள் சோகங்களை பழமைகள் குறைத்து வைக்கின்றன என்ற எண்ணம் அவள் மனதில் பதிந்து விட்டிருந்தது. அவளுக்கு பழயவைகளை மறந்துவிட எண்ணமும் இல்லை. அதையும் அந்த பழமைகள் எப்போதும் அவளுக்கு ஞாபக படுத்திக்கொண்டு இருந்தன.

பல்லவி என்கிற அவளுடைய பெயருக்கு ஏற்றாற்போல் இசையார்வம் கூடியவள். கலைகள் அத்தனையும் கற்றுக்கொண்டாள். வாய்ப்பாட்டில் அதிகம் ஆர்வம். அவ்வளவு அழகாக பாடுவாள். பாரதி அமைத்து வைத்த புதுமைப் பெண்ணும் கூட. நேர்ப்பட பேசுவாள். பரந்த சிந்தனை. ஆராய்ந்து முடிவு எடுக்கும் பக்குவம். பாரதியை ரொம்பவும் பிடிக்கும் அவளுக்கு. பாரதியின் அக்னி குஞ்சாக மாறிவிட ஆசை கொண்டிருந்தாள். கடைசியில் இப்போது பாரதியின் கண்ணம்மாவாக மாறிவிட்டிருந்தாள்.

அறிந்தவரையில் பாரதியின் கண்ணம்மா ரொம்பவும் பாவப்பட்டவள். தான் ஆசைப்பட்ட வாழ்க்கையினை எதனாலோ தொலைத்தவள். கற்பனையில் மட்டும் அவள் நேசித்து வந்தவனுடன் வாழ்ந்து வந்தாள். வள்ளுவம் கூறிய கற்பியல் களவியல் ஒழுக்கங்கள் மீறாமல் தன் கட்டுப்பாடும் விலகாமல் தனக்கென ஒரு உலகம் அமைத்து அதற்குள் வாழ்ந்தாள் அந்த கண்ணம்மா. பாரதியின் பாட்டுகளில் குழந்தையாக காதலியாக வலமும் வந்தாள். அவளைப்போல் இன்னொருத்தி ஆகிவிட கூடாது என்று எத்தனையோ பேர் பிரார்த்தித்தும் இருக்கிறார்கள். பிரார்த்தனைகள் எப்போதும் பலிப்பதில்லை.

கட்டுப்பாடுகள் என்றும் யாருடைய ஆசைகளையும் கேட்டு விட்டு விதிக்கப்படுவதில்லை. எல்லோரும் அதை எதிர்த்தும் போராட துணிவதில்லை. சிலவற்றை எதிர்க்கலாம். சிலவற்றை சிலருக்காக சகித்தும் கொள்ளலாம். சகித்துக் கொள்ள முடிவு கொண்டாள். தன் ஒருத்திக்காக இத்தனை காலம் பின்பற்றப்பட்டு வந்த சம்பிரதாயங்களும் வழக்காறுகளும் கட்டுப்பாடுகளும் உடைக்கப்பட்டு சமூகத்தில் தாக்கத்தை உண்டுபண்ண அவள் விரும்பவில்லை போலும். தன்னாசைகளை தனக்குள் பூட்டிக் கொண்டாள். இன்னுமொரு கண்ணம்மாவாக தன்னை மாற்றிக்கொண்டாள்.

எண்ணெய்யிட்ட கூந்தலை பின்னி முடிந்துகொண்டாள். அருகில் வைத்திருந்த ஆண்டாளின் திருப்பாவையை எடுத்துக் கொண்டாள். அழைபேசியில் ஒலித்த பாடலை நிறுத்தி விட்டு ஆண்டாளின் பாடலை பாடத்துவங்கினாள். மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்டாளின் பாட்டுக்களை ஒருத்தி பாடுகிறாள். அதுவும் உயிர்ப்புடன். கேட்பவர்களுக்கு மயிர்கள் குத்திட்டு நிற்கும். காலை குளிரிலும் அதிகமாக குளிரும். வீட்டிற்கும் தேவதைகள் வந்துவிட்டாற்போல் ஒரு உணர்வும் உண்டாகும். அவள் வலிகள் யாருக்கும் தெரியவில்லை. எல்லாரும் அவளுடைய கண்ணன் பக்தியை மட்டும் கண்டு கொண்டனர். ஆண்டாள் தன்னை ராதையென நப்பின்னையென நினைத்துப் பாடியவற்றை அவள் தானே ஆண்டாள் என்றெண்ணி பாடிக்கொண்டிருந்தாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா

அவள் உடல் காய்ந்து கொண்டிருந்தது. அதிகாலையில் அந்த மார்கழி குளிரில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டிருந்தாள். அவ்வளவு வெம்மை. குளிர் பிடித்து விட்டிருந்தது. அவளுக்கு அதுவும் நன்றாக இருந்தது. கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வகுப்பையும் நிறுத்தி விட்டு போர்வைக்குள் புதைந்து கொண்டாள். கண்கள் சிவந்து கலங்கி வீங்கி போயிருந்தது. கன்னங்களில் கண்ணீர் வடிந்து உலர்ந்து விட்டிருந்தது. தலையணை நனைந்து அவளது மனம் போலவே கனக்கத் துவங்கியது. அவளின் தனிமை உணர்வு மேலிட்டு விட்டது. அவளுடைய அவனை எண்ணிக்கொண்டாள். உடல் அனலாகி விட்டிருந்தது. தலைவலி வில்லைகளை விழுங்கிக்கொண்டாள். சுடுநீர் போத்தலில் நிரப்பி இருந்த கோப்பியை வார்த்து அருகில் வைத்துவிட்டு மறுபடி படுத்துக்கொண்டாள்.

வெம்மையில் பிதற்ற துவங்கினாள். காலைவேளைகளில் வீட்டில் தனியே இருப்பதால் அவள் பிதற்றல்களை கேட்டுக்கொள்ள யாரும் இருக்கவில்லை. நீண்டநாள் மனதுக்குள் அடக்கி வைத்திருந்தவைகள். எல்லாமுமாக வெளிய கொட்டத்துவங்கியது. சுயநினைவில் அவளில்லை. அவளுடைய உடல் அவள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட காரணத்தினால் மூளையை கட்டுப்படுத்த இயலவில்லை அவளால். நல்லவேளை தனிமையில் இருந்தாள்.

அவளுடைய மனம் என்ற மடை திறந்து வார்த்தை எனும் நதி பிரவகித்து பாயத்துவங்கியது. அவள் உதிர்த்த வார்த்தைகள் அவன் கேட்டிருந்தால் அத்தனை காலம் சொல்லாமல் இருந்தவற்றை எல்லாம் உடனே கூறி தீர்த்திருப்பான். அவளிடம் சொல்லுவதற்கென அவன் நிறைய கதைகள் வைத்திருந்தான். அவளிடம் அதுவரை அவற்றில் ஒன்றை பற்றிக்கூட பேசியது கிடையாது. அவன் மனதில் உள்ளவற்றை அவள் அறிவாள். அவளால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மட்டும் அவன் அறிவான். அவன் அதற்கு பழகிக்கொண்டான்.

“அருள்… அருள்… அருள்மொழி…”

மூர்ச்சையாகி விட்டிருந்தாள். சுரம் அவளுடைய உடல் பொறுத்துக்கொள்ளும் அளவை தாண்டி ஏறிவிட்டிருந்தது. மணித்தியாலங்கள் கழிந்தும் விழித்துக் கொள்ளவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கதவைத் தட்டி பெருத்த பிரயத்தனம் செய்து கதவை உடைத்து திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே அறையில் கட்டிலின் மேல் நினைவற்றுக்கிடந்த பல்லவியின் உடல் பற்றி எரியும் கொள்ளிக்கட்டை போல் வெம்மையுடன். அருகே ஆறிப்போய் எறும்பு மொய்த்துக்கொண்ட கோப்பி கோப்பை.

அவளுக்கு சுரம் தெளிந்து சுயநினைவு வருவதற்கு இரண்டு நாட்கள். முதல்நாள் இரவு பூராவும் அவசர சிகிச்சைப்பிரிவில். வார்டில் இரண்டு நாட்கள். இடைக்கிடையில் நினைவு மட்டும் வந்து போகும். முழிக்கையில் அருளென்ற பெயரை முணுமுணுப்பாள். அவளது முணுமுணுப்புக்களை புரிந்து கொள்ளும் பக்குவம் மருத்துவருக்கும் தாதிக்கும் அவ்வளவு ஏன் பெற்றெடுத்தவர்களுக்குமே புரியவில்லை.

அந்த இரண்டு நாட்கள் அவள் கட்டுப்பாடுகள் எல்லாம் கடந்து அவளுடைய அவனுடன் வாழ்ந்திருந்தாள். யாரைப்பற்றியும் சிந்திக்கவில்லை. எதையும் யாருக்காகவும் சகித்துக்கொள்ளவில்லை. அவளை கேள்வி கேட்க யாருமே இல்லை. அவளும் அவனும் மட்டும். அவர்களுக்கென்று ஒரு சொர்க்க லோகம். மேகங்கள் மேல் எல்லாம் பவனி வந்தாள். ஆழ்கடலில் ஆலிங்கனம் செய்தாள். கடற்கரையில் காதல் கற்பித்தாள். பாலையில் சோலையானாள். கப்பலின் மேல் கைவிரித்து நின்றாள். காற்றில் காணாமல் போனாள். பூவின் மேல் பனித்துளி ஆனாள். விளக்கின் மேல் சுடரானாள். எல்லாவற்றிலும் அவனும் கூடவே இருந்தான். அவள் ஆழ்மனதின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளமுன் மீண்டும் இந்த லோகத்துக்குள் சஞ்சரித்தாள்.

கண்கள் திறக்கும் போது அவள் எதிர்பார்த்திருந்த முகம் அங்கே இருக்கவில்லை. உடைந்துபோனாள். அவள் மனதின் காயத்துக்கு மூளை மருந்திட துவங்கியது. அவள் யோசித்துக்கொண்டாள். அவ்வாறெல்லாம் நடந்திருந்தால் விளைவுகள் எவ்வாறெல்லாம் வருமென்று கணித்துக்கொண்டாள். தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டாள். அருகிலிருந்த மருத்துவர் கூறிக்கொண்டு இருந்தது அவள் காதுகளில் விழுந்தது. சரியாக கேட்கவில்லை. எங்கோ பாதாள கிணற்றில் யாரோ பேசுவது போல் ஆரம்பித்து பின்னரே சரியாக கேட்கத்துவங்கியது.

“யாராச்சும் ஒருத்தர் கூட இருந்து உங்க பொண்ண பார்த்துக்கோங்க. அவா ரொம்ப தனிமையா பீல் பண்ணுறா. இன்னைக்கு ஈவினிங் துண்டு வெட்டலாம்.”

அவள் தனக்குள் சிரித்துக்கொண்டாள். யாரென்று தெரியாத மருத்துவருக்கு அவள் தனிமை புரிந்த அளவு பெற்றவர்களுக்கும் கூட இருந்தவர்களுக்கும் புரியவில்லை. அவள் மனம் நினைத்துக்கொண்டது. அவனைப்பற்றி பேசுகையில் உள்ளுக்குள் புன்னகைப்பதை நினைத்துப்பார்த்துக்கொண்டாள். அவன் மனதில் உள்ளவற்றை அறிந்து கொண்டபோது சிறப்பாக உணர்ந்ததை எண்ணிப்பார்த்தாள். தன்னுடைய நிலையை உணர்ந்தபோது மற்ற எல்லா உணர்வுகளையும் பூட்டிவைத்ததை சபித்துக்கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவனை ரொம்பவும் சபித்துக்கொண்டாள்.

‘அத்தனை கோடி பெண்கள் இருந்தும் என்னை மட்டும் அவன் பார்க்க வேண்டும்?’

‘என்மீது மட்டும் ஏன் இப்படி ஒரு முற்றறியாத அன்பைக் கொட்ட வேண்டும்?’

நாளடைவில் அவன் மாறிவிடுவான். மாற்றிவிடலாம். உலக நியதி அதுதான் என்பதை அறிந்து இருந்தாள். இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் பழையபடி சிரிக்கின்ற உதடுகள், இல்லையில்லை சிரிக்கின்ற கண்களை பெறுவாளா? அவள் மாறிவிடுவாளா?. மறுபடியும் சோகம் தொற்றிக்கொண்டது. யாரைவிடவும் அவள் அருளை நேசித்து இருந்தாள். வெளிக்காட்ட வழி மட்டும் இருக்கவில்லை. எஞ்சிவை எல்லாம் வெறும் வலிகள் மட்டுமே.

Comments

  1. உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன தமிழின் வார்த்தைகள் அழகாக....
    மேலும் தொடரட்டும்...

    வாழ்க தமிழ்.!!!

    ReplyDelete
  2. Wonderful brother
    Proud moments...
    Keep it up!
    All the very best

    ReplyDelete
  3. All the very best.
    Keep it up my dr frnd

    ReplyDelete
  4. "கண்ணில் தெரியுதொரு தேற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை நண்ணு முகவடிவு காணில் அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்"
    பாரதியின் அழகிய வரிகள் அழகான கதையில்... வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. மிக தாமதமாக இதை வசிக்க வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். உன் தமிழாளுமை ஒரு நளினம். எளிமையானது. இனிமையானது. இருந்தாலும் இது எனக்கு based on true stories போலவே இருக்கிறது.

    ReplyDelete
  6. இது கதையல்ல, சிலரின் உண்மையான உணர்வுகள் என்றே நினைக்கின்றேன்...
    எதிர்பார்ப்பு யாரை விட்டது???
    எதிர்பார்ப்புடன் நானும் காத்திருக்கின்றேன் உணர்வுகளின் அடுத்த தொகுப்பிற்கு.
    உங்கள் திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள்...
    வாழ்த்துக்கள் தம்பி ❤️

    ReplyDelete
  7. அனுஷன்April 12, 2020 at 3:34 PM

    அருமை நண்பா ஏக்கம் தாகம் உள்ளே தாக்கங்கள் தந்தன இரசனை தொடரட்டும். வாழ்த்துக்களும் ஒத்துழைப்பும் தொடரும்❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவளதிகாரம் | வேணி

முகாரி ராகம்

அவளதிகாரம் | பல்லவி

அப்பா..!

நீ பார்க்கும் பார்வைகள் 3