நீ பார்க்கும் பார்வைகள் 3

அவள் சமாதானம் ஆகியிருந்தாள். அவள் மெல்லிய கரங்கள் அவன் தடித்த இடக்கையைச் சுற்றிப்பிடித்து இருந்தது. வலக்கைப் பெருவிரலால் அவன் கையைச் சுரண்டினாள். அவள் ஸ்பரிசங்களுக்கு அவனுக்கு விளக்கம் வேண்டியிருக்கவில்லை. "சொல்லு குஞ்சம்மா… இப்ப என்ன செய்யோனும் நான்?" அவள் கையைப் பற்றியபடி கேட்டான். "எனக்கு இப்ப வீட்ட போவேண்டாம்." "அப்ப..." "ஐஸ்க்ரீம்!" என்று சொல்லி அவனை குழைந்தபடி பார்த்தாள். "சரி சரி ஐஸ்க்ரீம் ஓகே… ஆனா இப்பிடிப் பாக்காத என்னை ப்ளீஸ்!" "சரி" என்று சொன்னவள் இன்னும் அதிக வாஞ்சையோடு அவனைப் பார்த்தாள். "குஞ்சம்மா, இப்பிடியே பார்த்துட்டு இருந்த என்டா வாங்கிட்டு வாற ஐஸ்க்ரீம் உடன உருகிடும்" சிரித்தான். "இந்தக் குளிருக்கும் காத்துக்கும் உருகாது, நீ போய் வாங்கிக் கொண்டு வா, நான் அங்கால பீச்ல இருக்கிறன்." அவள் வெகுளித்தனமான பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே கடைக்குள் போனான். எந்த யோசனையும் இன்றி அவனைத் தட்டி கடைக்கு அனுப்பிவிட்டு அகன்ற கடற்கரைச் சாலையை கடக்க துவங்கினாள். அவள் நினைவில் இருந்தவைகள் எல்லாம் ஒன்றுதான். ...