நீ பார்க்கும் பார்வைகள் 1



அவனுடைய அழைபேசி ஆரவாரமாக ஒலித்தது. அணைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அதைத் தன் கைகளில் எடுத்தான். கண்களை கசக்கியபடி திரையை நோட்டம் விட்டான். அவன் தேடல் சிகப்பு நிற தொடுதிரை தான். பார்வை தெளிவாகும் முன் திரையில் அவன் பார்த்தது அவளுடைய பெயரை. தான்யா. அழகான பெயர். பெயரை கண் பார்த்து ஜீரணிப்பதற்குள் கைகள் சிகப்பு பொத்தானை தவிர்த்து பச்சைப் பொத்தானை தட்டிவிட்டது.

அவன் பேசும் சூழ்நிலையில் இல்லை. முந்தைய இரவு அவனது அலுவலக வேலைகள் முடித்து படுக்க ரொம்பவும் நேரம் கடந்து இருந்தது. அதனாலேயே மணி பதினொன்றரை கடந்தும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். மதியம் இரண்டு அடிக்கும் வரை எழும்புவது இல்லையென்று இருந்தவனை அந்த அழைப்பு குழப்பிவிட்டது. நேரம் தாழ்த்திப்படுத்ததால் உண்டான அழுத்தம் மற்றும் பழு காரணமாக அவன் கண்கள் வீங்கிப்போய் இருந்தது. அவன் வாயை எச்சில் நிரப்பி இருந்தது.

யோசிக்க நேரம் இருக்கவில்லை அவனுக்கு. அழைப்பை அணைத்துவிட்டு கழிவறையை நோக்கித் தாவி ஓடினான். முகம் கழுவித் திரும்புகையில் அவன் அறையின் அழைப்பு ஒலி அதன் பங்கிற்கு அலறியது. அழைபேசியை எடுக்கச் சென்றவன் அதை எடுத்து தான்யாவை மீண்டும் அழைத்துக்கொண்டு கதவை நோக்கி நடைபோட்டான். 

ஆம், அவன் தங்கி இருப்பது ஒரு அறையில். ஒரு நடுத்தர அளவு வீட்டுடன் இணைந்துள்ள ஒரு இணைப்பு அறை. அறை என்னவோ ஓரளவு பெரியது தான். அந்த நீண்ட அறை திரைகொண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. அறையின் புறத்தில் கழிவறை. திரைகொண்டு பிரிக்கப்பட்ட பின்புறத்தில் பெரிய மெத்தை ஒன்று மட்டும் நிலத்தில் போடப்பட்டு இருந்தது. முன்பகுதியில் ஒரு மேசை ஒரு கதிரை. ஒரு காஸ் ஸ்டவ். கூடவே ஒரேயொரு மூன்றுபேர் இருக்கக்கூடிய சோபா.

இவ்வளவற்றையும் கடந்து சென்று வாசல் கதவை திறக்கவும் அழைப்பை தான்யா ஏற்றுக்கொள்ளவும் சரியாக இருந்தது.

"குட் மோர்னிங், குஞ்சம்மா…"  கதவை திறந்தபடி சொன்னான்.

எதிர் பக்கத்தில் மறுமொழி ஏதும் இல்லை.

கதவிற்கு வெளியே தான்யா நின்றுகொண்டு இருந்தாள்.

"குஞ்சம்மா… நீ…" திடீர் என்று கதவை வேகமாக அடித்து சாத்தினான்.

அவள் அவனை இத்தனை நாள் கழித்து இந்தக் கோலத்தில் பார்க்கக்கூடாது என்பது அவன் ஆசை. அவன் அவளைப் பார்த்த அந்த ஒரு நொடியில் அவன் விழுந்து போனது என்னவோ உண்மைதான். அவளை அள்ளி அணைத்து முத்தமழை பொழிய வேண்டும் என்பது அவன் எண்ணம். ஆனாலும் அவள் தேவதையாய் நின்றுகொண்டு இருந்தாள்.

இவனோ ரெண்டு நாட்களாக குளித்து இருக்கவில்லை. இரவிலெல்லாம் வேலை செய்து பகல் பூராவும் தூங்கி வழிந்து இருந்து கொண்டிருந்தான். இப்போது ஒழுங்காக வாராத கேசம். வியர்த்து வடிந்த தேகம். உடம்பில் ஒரேயொரு காற்சட்டை மட்டும். அதுவும் காற்சட்டையா உள்ளாடையா என்று சொல்ல முடியாத அளவு சிறுத்துப்போயிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக என்றைக்கும் இல்லாத அளவு அவனுடல் நாறுவதாய் அவன் உணர்ந்தான். அந்தத் தேவதையை இப்படி அகோரியாய் எதிர்கொள்ள அவன் தயாராய் இல்லை.

அறையின் அழைப்பொலி தொடர்ந்து ஒலிக்கத் துவங்கியது. நேரம் தாழ்த்தவும் இயலாது. தாழ்த்தினால் அவள் கோவித்துக் கொள்ளக்கூடும். இப்படியே அரை அம்மணமாக அவள் முன்னே செல்லவும் இயலாது. அவன் இருதயம் மத்தளம் கொட்டத் துவங்கியது. கண்ணை அறையைச் சுற்றி நோட்டம் விட்டான். ரொம்பவும் கலைந்து போயிருந்த அறையில் அவன் கண்ணில் பட்டது அவன் உடுக்கும் சாரமும் துவாயும் தான். சாரத்தை இடையில் சுற்றி துவாயை அங்காவஸ்திரமாக்கிக் கொண்டு கதவைத் திறந்தான்.

கதவைத் திறந்தவன் சுதாரிக்கும் முன்பாக அவள் அவனைத் தாவி அணைத்துக்கொண்டாள். அவள் அணைப்பில் தெரிந்தது அத்தனை நாள் பார்க்காததின் ஏக்கமும் பாசமும். ஓரிரு நிமிடங்கள் அவன் திணறித்தான் போனான். அவளுடைய பிஞ்சுக் கரங்கள் கொடுத்த அழுத்தம் பெரியதாகவே இருந்தது.

அதுவரை நேரமும் அவளை எப்படி இப்படி எதிர் கொள்வேன் என்றிருந்தவன் தானாக தன்பங்கிற்கு தன் ஸ்பரிசங்களை தரத் துவங்கியிருந்தான். அவனுடைய முரட்டுக் கைகள் மென்மையாவது எல்லாம் அவள் ஒருத்தியிடம் மட்டும் தான். அவனுக்கு அவளே உலகம். அவளே ஜீவன். அவள் மட்டும் தான் எல்லாமும். 

அவன் தன் ஸ்பரிசங்களை மேலும் மென்மையாக்கி தலையை கொஞ்சமாய் அசைத்து அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு சொன்னான். "குஞ்சம்மா, ரெண்டு நாளா மாமன் குளிக்கேல்ல…"

"டேய் மாமா, எத்தன தடவ தான் சொல்றது. குஞ்சம்மா என்டு கூப்பிடாத என்டு"

"அழகுராணி நான் இன்னும் குளிக்கேல்ல…"

"அதுகென்ன இப்ப…?"

"கொஞ்சம் இருந்த என்டா குளிச்சிட்டு வந்திடுவன்…"

"தேவையில்ல… இதுவே நல்லாத்தான் இருக்கு!"

"மாமனுக்கு ஒரு மாதிரி இருக்கும்ல, உடம்பெல்லாம் வேர்த்து ஒரு மாதிரி ஸ்மெல் கூட வருது, ஒரு ரெண்டு நிமிஷம் பொறு, அதுக்குள்ள நான் வந்துடுறன்…"

அவன் அணைப்பை உதறிவிட்டு அவனைத் தன் பிடியிலிருந்து தள்ளிவிட்டாள். 

"இஞ்ச பாரு மாமா, உன்ர வேர்வை ஒன்டும் அசிட் இல்ல என்ன?"

"அப்பிடியில்ல குஞ்சம்மா…" வாயைக் கடித்துக்கொண்டான்.

"அப்ப எப்பிடி…?" என்றபடி கதவைத் திறந்தாள்.

வெளியேற யத்தனித்தவள் கைகளைப் பற்றிக்கொண்டான். அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். 

"குஞ்சம்மா… எங்க போற? ரெண்டு மாசம் கழிச்சு பாக்கிறம்… அத மறந்துட்டியா?"

"இல்ல…"

"அப்ப…"

"இல்ல… ஒன்டுமில்ல…" அவன் மார்பு அவள் கண்ணீரில் ஈரமாகியது.

"குஞ்சம்மா… என்ன இதெல்லாம்…?"

"எத்தன தடவ தான் சொல்றது அப்பிடி கூப்பிடாத…" என்று அவன் அணைப்பின் இறுக்கத்தை அவள் கூட்டினாள்.

அவன் அவள் கோபத்தை சிரித்தபடி ஏற்றுக்கொண்டான். மறுபடி அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் வைத்தான்.

"மாமா ஒன்டு சொன்னா கோவிக்க மாட்டியே..!"

"இல்ல சொல்லு" என்றான்.

"நிஜமாவே நீ கொஞ்சம் கப் அடிக்கிற மாமா… குளிச்சுட்டு வாரியா…" என்று சொல்லி சிரித்தாள்.

அவனும் ஏதோ வேறுவிடயம் தான் சொல்லப்போகிறாள் என்றவனுக்கு இதைக்கேட்டதும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இரண்டு பேரும் நன்றாக வாய்விட்டுச் சிரித்தனர்.

வேகவேகமாக குளித்து முடித்துவிட்டு ஓடிவந்தவன் ஒருகணம் அசந்துதான் போனான். அவன் அறை முற்றிலுமாக சரி செய்யப்பட்டு இருந்தது. இரண்டு மாத காலம் சுமாரான பராமரிப்பில் இருந்த அந்த அறை இன்றைக்குத் தான் பூரண பராமரிப்பில் ஜொலித்தது.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு அவள் சோபா மேல் சப்பணம் கட்டி அமர்ந்திருந்தாள். அவள் எப்போதும் அப்படித்தான் தனக்குப் பிடித்தமான விடயங்களை யாருக்காகவும் விட்டுக்கொடுத்து விடமாட்டாள். மற்றவர்களால் பெரிதாக தாக்கம் அடையமாட்டாள். அரவிந்த் மட்டும் விதிவிலக்கு. ஆம், அவனின் பெயர் அரவிந்த். அரவிந்திற்கு அவாளால் உண்டான தடைகள் என்று ஏதும் இல்லை. ஆனால் அரவிந்தின் ஒவ்வொரு அசைவும் அவளை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும். அவள் சந்தோசம் துக்கம் எல்லாமுமே அரவிந்தின் உணர்வுகளில் தான். அவன் சிரித்தால் காரணமே இன்றி அவள் சிரிப்பாள். அவன் சிறிது கலங்கினால் கூட இவள் உடைந்துவிடுவாள்.

அவளுக்கு அவன் இயல்பாய் இருந்தால் தான் பிடிக்கும் என அவனறிவான். தன் அறைக்கு யார் வந்தாலும் அவர்கள் முன் வெற்றுடம்பில் தோன்றவே மாட்டான். மற்றவர்கள் முன்னிலையில் சாரமோ காற்சட்டையோ உடுத்தமாட்டான். ஆனால் அவள் மட்டும் விதிவிலக்கு. அவளை ஒருபோதும் அந்நியமாக உணர்ந்ததே இல்லை. குளித்து முடித்து வந்தவன் தோளில் துண்டுடன் அவள் கால்களருகே அமர்ந்தான்.

அவன் கைகள் அவள் பாதங்களைப் பற்றிக்கொண்டது. மென்மையான வருடுதலை அவளுக்கு வழங்கிக்கொண்டு இருந்தான் அரவிந்த். உலகத்திலேயே ரொம்பவும் அழகானது என்றால் காதலைச் சொல்லாமல் செயல்களில் காட்டுவது. அதுவும் நான் உன்னிடத்தில் மட்டும் சரணாகதி என எந்தவித ஈகோவையும் காட்டாமல் கால்களை தூக்கி மடியில் வைத்து அர்ச்சிப்பது என்பதெல்லாம் யாருக்குத்தான் பிடிக்காது.

தான்யாவும் அவள் கைகளை அவன் தலைக்குள் விட்டு மிருதுவாக அழைந்தாள். அவனுக்கு அந்த அசைவு அதிகம் பிடிக்கும். சிறு வயதில் அவன் அன்னை அவனுக்கு செய்துவிட்டது அவன் நினைவில் இன்றும் இருந்தது. அவள் இறந்தபோன பிறகு தான்யா மட்டுமே அவனுக்கென்று உள்ள ஒரே சொந்தம். அவன் கண்களை நீங்கி ஒரு துளி அவள் பாதங்களில் விழுந்து அந்த இடத்தின் அமைதியை குலைத்தது.

"டேய் மாமா, வீட்டுக்கு வந்தவளுக்கு குடிக்க ஏதும் கொடுக்க மாட்டியா?"

" மறந்துட்டன் குஞ்சம்மா, உன்னப் பார்த்த கிறக்கம் இன்னும் குறையேல்ல எனக்கு."

"அதான் கண்ணு வேர்க்குதோ?" என்று அவன் தலைமுடியைப் பிடித்து இறுக்கம் கூட்டினாள்.

"வலிக்குது குஞ்சம்மா… இரு நான் உனக்கு ஹாட் சொக்லேட் கொண்டு வாறன்" என எழுந்தான்.

எழுந்தவனைப் பிடிக்க செய்த முயற்சி தவறவிடவே சிரித்துக்கொண்டு ரெண்டு கால்களையும் அணைத்தபடி சோபா மேல் சரிந்தாள்.

அரவிந்த் சமையலில் கில்லாடி. சிறுவயதில் இருந்தே ஹாஸ்டல், தனிமை என்று வளர்ந்ததால் அவனுடைய வேலைகளில் எல்லாம் பூரணம் காட்டுவான். ஒவ்வொரு முறையும் ஏதோவொரு புதிய செய்முறையில் ஏதாவது கொடுத்து விடுவான். இன்றைக்கு அவளுக்கு கிடைத்து இருப்பது ஹாட் சொக்லேட்.

தான்யா, அரவிந்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். அவன் செய்கிற ஒவ்வொரு செயலையும் ரசித்தபடியே இருந்தாள். அவன் உடல்வாகு கொஞ்சம் தேறி இருந்தது. அவன் ரெண்டு மாத குவாரண்டைன் காலத்தை வீணாக்கவில்லை. சற்றே அதிகமாக அவன் மார்பு விரிந்தும் புஜங்கள் அகன்றும் இருந்தன. சிகை வளர்ந்து சிறு குடுமி வைக்கலாம் என்ற அளவில் இருந்தது. தாடி அளவாக வெட்டி எடுக்கப்பட்டும் இருந்தது. வந்தவுடன் கவனிக்கத் தவறியவற்றை நன்றாக அளந்துவிட்டாள்.

எதேர்ச்சையாக திரும்பியவன் அவள் அவனைப்  பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவன் கன்னங்கள் வெக்கத்தில் சிவந்து போயின. உதடு குவிந்து கன்னத்தில் குழியொன்று தோன்றி இருந்தது. அவள் முற்றிலுமாக விழுந்துவிட்டாள். அவளால் இனிமேல் ஒரு கணமும் அவனினின்று பார்வையை அகற்ற முடியாது.

"குஞ்சம்மா, அப்பிடி பாக்காத..."

குஞ்சம்மாவிடம் இருந்து பதிலில்லை.

அவன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான்.

"குஞ்சம்மா… ப்ளீஸ் அப்பிடிப் பாக்காத… மிக்ஸிங் பிழைச்சா சரி செய்ய தெரியாது எனக்கு…"

அவளிடம் இருந்து பதிலில்லை.

அவன் திரும்பி நின்று கொண்டான்.

அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான். அவள் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். கண் வெட்டாமல் இமை மூடாமல் அன்பு ததும்ப அவனைப் பார்த்திக்கொண்டே இருந்தாள்.

அவன் ஒரு பெரிய கோப்பை நிறைய சுடும் சொக்லேட் பானத்தை நிரப்பி கவனமாக பிடித்துக் கொண்டுவந்து அவள் கைகளில் கொடுத்தான். அதன் போதையூட்டும் சொக்லேட் வாசம் அறையை நிரப்பி இருந்தது. அவளுக்கு சொக்லேட் என்றால் பெரிதாக ஈடுபாடு இல்லை. இருந்தும் அந்த வாசமும் கைகளில் பரவிய இளம் சூடும் அதை ருசிக்க வேண்டி தூண்டியது.

கண்களாலே கேட்டாள் எனக்கு இங்கு இருக்கிறது உனக்கு எங்கே? என்று.

அவன் மறுமொழி "குஞ்சம்மா நீ அவ்வளவும் குடிக்க மாட்ட, குடிச்சுட்டு மிச்சத்தை தா நான் குடிக்கிறன்."

அவளுக்கு அவனை நினைத்தால் பொறாமையாய் இருந்தது. எவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டான். அத்தனை கோப்பைகள் இருக்கும் போது இருவருக்குமாக எடுத்து வந்திருக்கலாம். இந்தப் பெரிய கோப்பை. நிரம்ப சுடும் சொக்லேட். நான் குடித்த மிச்சம் அவன் குடிப்பான். ஹவ் ரொமான்டிக்!

இரண்டு கைகளால் கோப்பையைப் பிடித்து மெல்ல இதழருகே கொண்டு சென்றாள். கண்களை மூடிய படி அந்த சொக்லேட் வாசத்தை நுகர்ந்து மென்மையாக ஊதிவிட்டு பருகினாள். அது ஒரு குழந்தையின் செய்கையை அவனுக்கு ஞாபகப்படுத்தியது. உதடுகள் பூராவும் சொக்லேட் சாயம் படிந்து இருக்க பாதிக் கோப்பைவரை குடித்து இருந்தாள். குபீரென்று வந்த சிரிப்புகளையும் அடக்கிக்கொண்டு அவளை நோக்கிக் கொண்டு இருந்தான்.

அவள் கொஞ்சம் தடித்துப் போயிருந்தாள். தினசரி வீடியோ அழைப்புகளில் கதைத்த போதும் நேரில் அதிக வனப்பாய் இருந்தாள். அவன் அவளை கதவை திறக்கும் போதே முற்றாக பார்த்து இருந்தான். ஆனாலும் இவ்வளவு அருகாமை அவனை ஏதோ செய்தது. இப்போதும் மீசை வைத்தது போல் குடிக்கிறாளே என்கிறது அவனை மேலும் சிரிப்பூட்டியது. சிரித்தும் விட்டான்.

"ஏன் மாமா சிரிக்கிற?" என்றபடி கோப்பையில் இருந்து வெளியே வந்தாள்.

"இல்ல ஒன்னுமில்ல குஞ்சம்மா!"

"என்னை அப்பிடி கூப்பிடாத மாமா!"

"நீ மட்டும் என்னை மாமா என்டு கூப்பிடலாம் அது மட்டும் பிரச்னை இல்ல, நான் குஞ்சம்மா சொன்னத்தான் பிரச்சனை, என்ன?"

"ஓம்"

"இங்க வாவன்." என்று அவன் அருகில் இருந்த இடத்தைத் தட்டிக் விட்டு அவனும் கொஞ்சம் அருகாமைக்கு நகர்ந்தான்.

"ஓம் வாறன்" என்றவள் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தாள்.

அவள் கன்னங்களைக் கைகளில் ஏந்தியவன், "நீ எப்பவும் எனக்கு குஞ்சம்மா தான். என்ர அப்பா அம்மாவை அப்பிடித் தான் கூப்பிடுவார். அவயள்ட இடத்துல நீதானே இருந்து என்னைப் பார்த்துகிற." என்றபடி அவள் உதட்டைப் பிடித்து அருகில் இழுத்து அவன் சுவாசம் அவளை தீண்டும் தூரத்தில் இருந்து அவள் கண்களைப் பார்த்தான். அப்படியே உதட்டில் இருந்த சொக்லேட் கறையை விரலால் வழித்து எடுத்து தன் விரல்களைச் வாயில் போட்டுக் கொண்டான்.

ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவள் அவன் கண்களையே உற்று நோக்கினாள். ஏற்கனவே பலமுறை இருவரும் இதழ் முத்தங்கள் பரிமாறியது உண்டு. ஆயினும் இந்தத்தருணத்தை இப்படியே அனுபவிக்க விரும்பி இருந்தாள். அவனும் அதையே விரும்பினான்.

அவள் கன்னத்தில் மெல்லிய முத்தம் ஒன்று இட்டுவிட்டு அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான். இன்றைக்கு என்னவோ தான்யா அவனை ஏதோ ஒரு வழி பண்ணிவிடுவதென்றே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவனுடைய பார்வைகளும் அவளை ஏதோ செய்து கொண்டே இருந்தது.

அவள் மடியில் படுக்கும் போது ஒரு குழந்தையாகவே மாறிப்போய் இருந்தான். பன்னிரெண்டு வருடங்கள் முன் அவனை நீங்கிச்சென்ற அவன் அன்னை அவனுக்கு மீண்டும் கிடைத்துவிட்டாள். அவளுக்கோ அவன் பார்வைகளில் அவள் சுயத்தேடல் பூர்த்தியாகி இருந்தது.

இரண்டரை மாதங்கள் தேக்கிவைத்திருந்த கதைகள் பேசவே அன்றைய நாள் சரியாகிப் போயிருந்தது இருவருக்கும்.

Comments

  1. அருமை எழுத்தாளரே!!!

    ReplyDelete
  2. அற்புதமான படைப்பு😍 Keep on writing thambi❤

    ReplyDelete
  3. Semma😍😍🔥🔥 keep it up sugan do writing😍❤

    ReplyDelete
  4. Cute story ����

    ReplyDelete
  5. ❤️ அருமை காதலு நயம் மெச்சுது டா

    ReplyDelete
  6. காதல் மீதான இந்த ஒரு பார்வை சூப்பர்🔥👏🏻👌🏻
    வாழ்த்துக்கள் தம்பி.தான்யா மற்றும் அரவிந்தை மறுபடியும் பார்ப்போமா??? பகுதி 2 எழுதும் ஐடியா இருந்தா இப்போதே எழுதி அனுப்பிடுங்கோ,🤪😂

    ReplyDelete
  7. ❤ need some improvement. Otherwise splendid

    ReplyDelete
  8. அருமையான எழுத்தோட்டம் 👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவளதிகாரம் | வேணி

முகாரி ராகம்

அப்பா..!

நீ பார்க்கும் பார்வைகள் 3

நீ பார்க்கும் பார்வைகள் 2