நீ பார்க்கும் பார்வைகள் 2



அவனுடைய தேவதையின் மடியில் தஞ்சம் புகுந்திருந்தான். அவளும் அவளுடையவனின் தலைமுடியை வலது கையால் அழைந்தபடி இருந்தாள். அவள் இடது கை அவன் இருகரங்கள் இடையே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அவன் அந்தக் கரத்தை குழந்தை விளையாட்டுப் பொம்மையைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளது கைதான் எவ்வளவு மென்மை.


அவள் மௌனித்து அவன் செய்கைகளை ரசித்துக் கொண்டு இருந்தாள். அரவிந்தின் முகம் ஒருபோதும் பாவம் காட்டாது. ஆனால் அவன் கண்கள் அதிகம் காட்டும். பலராலும் அதை உணர்ந்து கொள்ள இயலாது. ஆனால் தான்யா அவ்வாறு இல்லை. அவன் முகத்தசை அசைவுக்குக்கூட அர்த்தம் கூறுவாள். அவன் கண் சிரித்தால் அவள் மனம் ஆகாசத்தில் சிறகு விரித்துப் பறக்கும். அவன் கண்கள் சிறிது சோபை இழந்தாலும் கூட அவள் ஆன்மா எங்கோ ஆழங்களில் பாதாளத்தில் இருந்து கதறி அழும்.


இன்றைக்கு அவள் பார்த்துக் கொண்டிருந்த பார்வைக்கு அவன் கண்கள் ஜொலித்துக் கொண்டு இருந்தது. அவன் கைகள் இரண்டும் அவள் கையைப் பற்றிக்கொண்டு இருந்தது. அந்தப் பிடிமானம் அவன் உள்ளத்தின் ஆழமான உணர்வுகளை அவளுள் கடத்திக்கொண்டு இருந்தது. அவன் வாய் ஏதோ ஒரு பாடலை மெல்ல உச்சரித்துக் கொண்டிருந்தது.


'எனக்கென உன்னைக் தந்து, உனக்கிரு கண்ணைத் தந்து அதன் வழி எனது கனா காணச்சொல்லியதே…'


"மாமா… ஏதும் சொன்னியா?"


"இல்லையே குஞ்சம்மா"


"இல்ல ஏதோ கேட்டுச்சு"


"இல்லை எதுமில்ல குஞ்சம்மா" சிரித்தபடி அவளை அண்ணாந்து பார்த்தான். மெல்லக் கைகளை விடுத்து சோபாவில் தன் உடலை நெளித்துத் திருப்பிக் கொண்டான். அவளைக் காண ஏதுவாக.


"நீ நான் கண் கனவு என்டு ஏதோ எல்லாம் கேட்ட மாதிரி இருக்கு!"


"அது வந்து குஞ்சம்மா…" எழும்ப எத்தனித்த படி "நீ வந்து கன நேரம் ஆச்சு நான் உனக்கு ஏதும் சாப்பிட கொண்டுவாரன்." என்றான்.


"எங்க ஓடப்பாக்கிற…" என்று எழும்பப் போனவனைப் பிடித்து மடியோடு அணைத்துக்கொண்டாள்.


"மாமா, இஞ்ச பார்…" அவன் தலையைத் திருப்பித் அவன் கண்ணோடு பார்த்தாள். அவன் இரு கன்னங்களையும் கைகளில் எந்திக்கொண்டாள். மெல்ல அவன் முகம் நோக்கி தன் முகத்தைக் கொண்டு சென்றாள். அவன் கண்களுக்கு அவள் கண்கள் தெரியும் இடத்தில் நிறுத்தி அவனையே பார்த்தபடி ஸ்தம்பித்திப் போனாள்.


"கிளம்பு மாமா, வீடு வரைக்கும் வந்து விட்டுட்டு வா." ஒரு குழந்தையைப் போல் கேட்டுவிட்டு அவன் முகதருகில் இருந்து தன் முகத்தை விடுவித்துக் கொண்டாள்.


"குஞ்சம்மா…"


"ஓம்… நான் தான்…"


"குஞ்சம்மா…"


"ஓம்…"


"கொஞ்சம் இருந்துட்டு போவன்." பாவமாக அவள் கண்களை வெறித்தான்.


"இல்ல, எனக்கு இப்பவே போகோனும்." என்றபடி அவனை மடியில் ஒழுங்காகப் படுக்கவைத்து கைகளால் அணைத்துக்கொண்டாள்.


"குஞ்சம்மா…" அவன் பார்வைகள் அவள் கண்களை இன்னும் அதிகமாக ஊடுருவியது.


அவள் வாய் எதையோ கூற எடுத்து மிடறு விழுங்கியது. அவள் கை அவன் வெற்று மார்பில் கோலம் போடத் துவங்கியது. 


அவள் சொல்வதைச் செய்யவெல்லாம் மாட்டாள். எப்போதும் வாய்க்கொண்டு நிராகரிப்பதை செயல்கொண்டு காட்டிவிடுவாள். அவன் வாய்விட்டுக் கேட்கும் எல்லாவற்றையும் வாயால் மறுத்து அவனை ஒருநொடி வாட்டிவிட்டு செயலில் மருந்து போடுவாள். பழகிப்போன செயலென்றாலும் ஒவ்வொரு முறையும் அவள் சொல்லும்போது அந்த ஓரிரு நொடிகளில் பெருஞ்சோகம் ஒன்றை அனுபவித்து வந்துவிடும். பின்னர் அவள் காட்டும் வாஞ்சனைகளை எல்லாம் பன்மடங்காக அனுபவிப்பான்.


"குஞ்சம்மா… எந்த உடுப்புப் போடட்டும்?"


"மாமா பேசாம இப்பிடியே வந்துரு, நல்லாத்தான் இருக்க நீ." என்று சொல்லிச் சிரித்தாள்.


"எனக்கு ஓகே. வா போவம்." என்று பைக் கீயையும் எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.


வழியை மறித்துக் குறுக்கே வந்தவள் "எந்த சிரிக்கி பார்க்கிறதுக்கு." என்று சொன்னபடி அவனை முட்டி நிறுத்தினாள்.


"இல்ல வா, இப்பிடியே போகலாம்." என்றபடி அவளையும் தள்ளிக்கொண்டு முன்னேறினான்.


"மாமா!" அவன் கண்களுக்குள் பார்வையை செலுத்தினாள்.


இதற்குமேல் அவனால் விளையாட இயலாது. சரணடைந்தான் அவளிடம்.


"நான் போய் ரெடியாகிட்டு வாறன். ரெண்டு நிமிசம் பொறு வாறன்."


திரைக்குப் பின்னால் இருந்து அலறினான். "குஞ்சம்மா…"


"மாமா…" பதறியவள் திரையை நோக்கி விரைந்தாள்.


"குஞ்சம்மா வராதா…"


"என்ன மாமா என்னாச்சு…" அதற்குள் அவள் திரையை கடந்துவிட்டிருந்தாள்.


ஏதோ சொல்ல எண்ணியவன் கூப்பிடுவதற்கு பதிலாக கத்திவிட்ட படியால் அவனுக்கு ஏதோ விபரீதம் என்று அவள் ஓடி வரவும் அவன் அரைகுறையாய் நிக்கவும் சரியாக இருந்தது. 


அவளைப் பார்த்ததும் கைகளில் இருந்த சாரத்தைக் கொண்டு இடையை மறைத்துக்கொண்டான். அவன் முகம் வெக்கத்தில் சிவந்து முழுப் பல்வரிசையும் தெரியும் படி சிரித்தான். 


"இதக் காட்டுறதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?"


இல்லை என்கிற மாதிரி தலையை அப்பாவியாய் ஆட்டினான்.


"இதெல்லாம் எப்பவோ பார்த்திட்டன்." சொல்லக்கூடாததை சொல்லிவிட்டது போல் பற்களைக் கடித்துக் கொண்டு திரும்பி மறுபுறம் போனாள்.


"என்ன சொன்ன… தானு?"


அவள் திரும்பிப்பார்க்கமல் மேசையருகில் சென்று நின்று கொண்டாள்.


அவள் பின்னே வந்தவன் திரையைக் கடக்க முன்னதாக முக்கால் காற்சட்டை ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு அதன் பொத்தான்களைப் பொறுத்தியபடி அவளருகே வந்து நின்றான்.


"தானு, என்ன சொன்ன இப்ப நீ?"


"இல்ல ஒன்னுமில்ல…"


"தானு…" அவள் தோளில் கைகளை வைத்து அவள் கண்களைப் பார்த்தான்.


"மாமா, அது ஒன்னுமில்ல…" என்றவள் மேசை மேலிருந்த அவன் சட்டையை அவனுக்கு மாட்டிவிடத் தயாரானாள்.


"தானு…"


அவன் கூப்பிட்டத்தை சட்டை செய்யாது. ஒவ்வொரு பொத்தானாக போட்டுவிட்ட பிறகு நீளக்கைகளை உருட்டிவிட்டாள்.


"குஞ்சம்மா…"


"ஓம்… நீ ரெடி தானே மாமா வா போவம்." என்றபடி பைக் கீயை எடுத்தாள்.


"இல்ல அது தேவையில்லை" என்று கீயை வைத்திருந்த அவள் கையை மேசைக்கு நகர்த்தினான்.


"உன்ர வீடு அவ்வளவு தூரத்துல இல்ல குஞ்சம்மா… ஐ வோக் யூ ஹோம்."


"சரி மாமா…" கதவை நோக்கி நடந்தாள்.


அறையை விட்டு வெளியேறி இரண்டு தெருக்கள் கடந்தும் கூட இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை.


அவனது மனதில் ஆயிரம் எண்ணங்கள், 'அவள் ஏன் அவ்வாறு கூறினாள். தன்னை எங்கே அரைநிர்வாணமாக பார்த்திருப்பாள். இருந்தாலும் ஏன் அதை அவ்வளவு அழுத்தமாக கூறவேண்டும்.'


அவளது மனதிலும் எண்ணங்கள் அலைமோதின, 'இடம் பொருள் ஏவல் பாராமல் நான் சொல்லிவிட்ட ஒரு வார்த்தை அவனை எவ்வளவு பாதித்திருக்கும். எவ்வளவு பாதித்திருந்தால் என்னை எப்போதும் இல்லாத அளவிற்கு பெயர் சொல்லி கூப்பிட்டு இருப்பான். என்ன இருந்தாலும் அவன் அப்படியெல்லாம் செய்து இருக்கக்கூடாது. என்னை, அவன் குஞ்சம்மாவை எல்லாரும் கூப்பிடுவதைப் போல…' 


'கூறினால் என்ன? நான் அவளை அவ்வாறு அதட்டிக் கூப்பிடுவது போலக் கூப்பிட்டு இருக்கக் கூடாது. மற்ற எல்லோரையும் போல. அவள் என் குஞ்சம்மா. அவளாக கூறும் போது என்ன விடயம் என்று தெரிந்து கொண்டால் போதும். காலத்துக்கும் தெரியாமல் இருந்தாலும் இருக்கட்டும்…'


'அவன் தானே கூப்பிட்டான். அவனுக்கு அந்த உரிமை இல்லையா என்ன? அந்த சம்பவத்தைக் கூறி மன்னிப்புக் கேட்டுவிடு தான்யா! அவனை கலங்கடித்து விடாதே!' என அவள் யோசித்தபடி நடந்து கொண்டிருக்கையிலேயே பின்னால் வந்து கொண்டிருந்த அரவிந்த் அவளைக் கூப்பிட்டான்.


கடற்கரைச் சாலையின் முக்கியமான பகுதியில் இருவரும் நின்றிக்கொண்டு இருந்தனர்.


"குஞ்சம்மா…" என்றழைத்தவன் அவளை நெருங்கி வந்து மண்டியிட்டு அமர்ந்து மன்னிப்புக் கேட்கும் சாயலில் அவளைப் பார்த்தான்.


அவ்வளவுதான் அவள் கண்கள் குளமாகிப் போயின. அவள் கலங்கிய கண்களால் அவன் கண்களை நோக்கினாள். அவன் கண்களும் சிவந்து கலங்கிப் போயிருந்தது.


"குஞ்சம்மா என்ன மன்னி…" அவள் கைகள் அவன் வாயைப் பொத்திவிட்டிருந்தது. அவனைப்போலவே மண்டியிட்டமர்ந்தாள்.


அவன் கண்களின் தண்ணீர் அவள் கைகளை நனைக்கத் துவங்கி இருந்தது. அவளைக் காயப்படுத்திவிட்டோம் என்கிற வருத்தம் அவன் மீதே கோபமாய் மாறிப்போய் இருந்தது அரவிந்துக்கு.


அவனை நடுவீதியில் இப்படி மண்டியிட்டுருந்து அழ வைத்துவிட்டோமே என்று அவளுக்கும் அவள் மீதே வெறுப்பொன்று உண்டாகி இருந்தது. அந்த வெறுப்பும் இயலாமையும் கண்ணீராய் மாறி கன்னங்கள் வழியே வழிந்து சொட்டு சொட்டாய் விழுந்து நிலத்தை நனைத்தது.


"குஞ்சம்மா அழாத…" என்றபடி அவன் அவள் கண்களைத் துடைத்துவிட்டான்.


"நீயும்…" என்று தொடங்கியவள் விக்கி அழத் துவங்கினாள்.


இத்தனை காலம் ஒருவரை ஒருவர் பார்க்காமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்து விட்டு சந்தித்த போது இப்படியெல்லாமா நடக்கவேண்டும் என்பதே இருவரின் மனநிலையும்.


தேம்பித் தேம்பி அழுபவளை சமாதானம் செய்ய அவனுக்கு வழி தெரியவில்லை. வேடிக்கை பார்ப்பதற்குச் பெரிதாக சனம் ஏதும் இல்லை என்ற போதும் ஓரிருவர் இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கவே செய்தனர். 


மண்டியிட்டு இருந்தவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவள் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள். 


"இல்ல ஒன்னுமில்ல குஞ்சம்மா...இதெல்லாம் ஒரு விசயமா… இதுக்கேன் இவ்வளவு…" அவன் குரலும் தழதழத்தது. அவன் கண்களிலும் நீர் அருவியாய் கொட்டத் துவங்கியது. அவனிடம் இருந்து விம்மும் சத்தம் வரவில்லை. ஆனால் அழுத்து கொண்டிருந்தான்.


மனத்தில் தைரியத்தை வரவைத்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்து இருந்தவளின் கன்னங்களைத் தாங்கிப் பிடித்தான். அவன் கண்களுக்குள் தன் பார்வையைச் செலுத்தினான். கலங்கிக் கிடந்த கண்ணிலும் அவள் அவன் பார்வையை ரசித்தாள். அதனால் மேலும் வேகமாக அழத்துவங்கினாள்.


அவன் அவள் கன்னத்தை இன்னும் கவனமாகத் தாங்கிப் பிடித்தான். அவளருகே மெல்ல நகர்ந்தான். தன் கண்களால் அவள் கண்களை ஊடுருவியபடி, அவள் அழுகை ஓயும் வரைக்கும், அவள் குற்றவுணர்ச்சி குறையும் வரைக்கும், அவள் இதழ்களில் ஒரு ஆழ்ந்த முத்தம் வைத்தான்.


Comments

  1. Yov.. love scene kannu munnadi imagine aagudhu ya 😍.keep writing

    ReplyDelete
  2. உயிரோட்டமான வரிகள்❤❤

    ReplyDelete
  3. இது கதையா? 🤔, இல்லை அரவிந்த், தான்யாவை நேரிலேயே பார்க்கிறேனா என்பது புரியவில்லை. மிகவும் அழகிய வரிகள் இக் கதாபாத்திரங்களை உயிர்ப்பித்து காட்டுகின்றன. வாழ்த்துக்கள் தம்பி. 🔥❤️👌🏻

    ReplyDelete
  4. பார்வைகளில் பல பரிணாமங்கள் காட்டிச் செல்லும் காதல் விழிகள், இருவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் லயிக்கும் பாசங்கள்.....
    தொடர்ந்தெழுது sukka❤️😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவளதிகாரம் | வேணி

முகாரி ராகம்

அப்பா..!

நீ பார்க்கும் பார்வைகள் 3