நீ பார்க்கும் பார்வைகள் 3
![]() |
அவள் சமாதானம் ஆகியிருந்தாள். அவள் மெல்லிய கரங்கள் அவன் தடித்த இடக்கையைச் சுற்றிப்பிடித்து இருந்தது. வலக்கைப் பெருவிரலால் அவன் கையைச் சுரண்டினாள். அவள் ஸ்பரிசங்களுக்கு அவனுக்கு விளக்கம் வேண்டியிருக்கவில்லை.
"சொல்லு குஞ்சம்மா… இப்ப என்ன செய்யோனும் நான்?" அவள் கையைப் பற்றியபடி கேட்டான்.
"எனக்கு இப்ப வீட்ட போவேண்டாம்."
"அப்ப..."
"ஐஸ்க்ரீம்!" என்று சொல்லி அவனை குழைந்தபடி பார்த்தாள்.
"சரி சரி ஐஸ்க்ரீம் ஓகே… ஆனா இப்பிடிப் பாக்காத என்னை ப்ளீஸ்!"
"சரி" என்று சொன்னவள் இன்னும் அதிக வாஞ்சையோடு அவனைப் பார்த்தாள்.
"குஞ்சம்மா, இப்பிடியே பார்த்துட்டு இருந்த என்டா வாங்கிட்டு வாற ஐஸ்க்ரீம் உடன உருகிடும்" சிரித்தான்.
"இந்தக் குளிருக்கும் காத்துக்கும் உருகாது, நீ போய் வாங்கிக் கொண்டு வா, நான் அங்கால பீச்ல இருக்கிறன்."
அவள் வெகுளித்தனமான பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே கடைக்குள் போனான்.
எந்த யோசனையும் இன்றி அவனைத் தட்டி கடைக்கு அனுப்பிவிட்டு அகன்ற கடற்கரைச் சாலையை கடக்க துவங்கினாள். அவள் நினைவில் இருந்தவைகள் எல்லாம் ஒன்றுதான். அவனிடம் அந்தக் கதையை இன்று சொல்லி முடித்து விடவேண்டும் என்பது மட்டுமே. எப்படிச் சொல்லலாம். எங்கே இருந்து தொடங்குவது என யோசித்துத் துவங்கியது தான் இந்த ஐஸ்க்ரீம் நாடகம்.
யோசனைத்துக் கொண்டே வீதியைக் கடக்கத் துவங்கியவள் அதை முற்றாகக் கடக்காமல் நடுவீதியில் நடந்துகொண்டு இருந்தாள். எதிரே வந்துகொண்டிருந்த அந்தப் பெரிய வேனையும் கவனிக்கத் தவறியிருந்தாள். அந்தச் சாலையை அப்படிக் கடப்பதெல்லாம் சகஜம் ஆனபடியால் வாகனம் வேகத்தைக் குறைக்கவில்லை. அவளோ அதை சட்டை செய்ததாகவும் தெரியவில்லை.
அவள் அவனோடு கதைக்கப் போகின்றவைகளைத் தன்னுள் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தாள். அதற்க்கான சிந்தனையில் மூழ்கிப்போயிருந்தாள்.
வாகனம் அவள் அருகே நெருங்கவும் ஏதோ ஒரு குரல். ரொம்பவும் பழகிய குரல். மெதுவாகக் கேட்டது. ஒரு இரைச்சல் மிகுந்த ஹோர்ன் சத்தத்தையும் தாண்டி, பின்னாலிருந்து. அரவிந்தின் குரல் கேட்ட மாத்திரத்தில் சுயநினைவுக்கு வந்தவள் ஓரடி பின்னால் வைத்துத் திரும்பி அவனைப் பார்த்தாள். அந்த ஒரு கண இடைவேளையில் வாகனம் அவள் உடலை மெல்ல உரசிச் செல்லச் சரியாய் இருந்தது.
அவள் தன்னிலை மறந்துவிட்டாள். அவள் கண்கள் மங்கத் துவங்கியது. கால்கள் தள்ளாடத் துவங்கியது. அவள் தன் மங்கிய கண்களை கொண்டு அவனைத் தேடினாள். அவள் கண்கள் அவனைக் கண்டுகொண்டது.
அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்னரே அவளுக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
அவள் நடுவீதியில் நடந்துசென்று கொண்டிருப்பதைப் பார்த்ததுமே அவன் திரும்பிவருவதாகக் கூறி வெளியே ஓடி வந்திருந்தான்.
"குஞ்சம்மா…"
"குஞ்சம்மா…" அவளைக் கூப்பிட்டபடி பின்னாலேயே ஓடிச்சென்றான்.
"குஞ்சம்மா…" அவன் மூன்றாம் முறை கூப்பிடும் போதே அவள் அவனைத் திரும்பிப்பார்த்தாள்.
அவளை வாகனம் தொட்டுச் சென்றதைப் பார்த்ததுமே அவன் மனம் வேகமாக இயங்கியது. அவள் விழமுன் தாங்கிவிட வேண்டும் என்று தன் கதியை கூட்டி இருந்தான்.
அவனைப் பார்த்தவள் கண்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவன் அவளை நோக்கி ஓடிவருவதும் அவன் பின்னால் ஒரு கார் வருவதும் மட்டுமே. அவளால் குரல் எழுப்ப முடியவில்லை. அவள் கண்கள் வெறித்து அவனை நோக்கிக் கொண்டிருந்தது. வேன் கடந்து போன அதிர்ச்சியும் அடித்துக்கொண்டிருந்த பேய்க்காற்றும் அவளை நிலைகுலைய வைத்திருந்தது. அவள் இரண்டடி வைக்கும் முன்னதாகவே அந்தக் கார் அவனை நெருங்கிவிட்டிருந்தது.
அவன் அவள் கண்களின் கலவரத்தைக் கண்டு கொண்டான். ஒருவாறாக சுதாரித்துக்கொண்டான். ஓடிச்சென்று கொண்டிருந்தவன் தான்யா இருந்த பக்கம் தாவினான். அந்தக் காரும் தெய்வாதீனமாக அவர்களை ஓரளவில் விலத்திச் சென்றது.
தாவியவன் பக்கவாட்டாகப் புரண்டு விழுந்தான். பெரிதாகக் காயங்கள் ஏதும் இல்லை. சிறிதான சிராய்ப்புகள் மட்டுமே. அவளுக்கும் காயம் ஏதும் இல்லை. அதிர்ச்சியும் வாகனம் தேய்த்துக் கொண்டு சென்ற இடத்தில் எரிச்சல் மாத்திரம் தான்.
"மாமா, உனக்கொண்டும் இல்லையே…"
"இல்லைக் குஞ்சம்மா… எனக்கொண்டும் இல்லை" என்றான்.
அவள் அவனை நெருங்கி அணைத்துக்கொண்டாள். பிறகு மெல்லத் தூக்கினாள். அவன் உடல்பாரத்தை அவளால் சுமக்க இயலாது. ஒரு ஊன்றுகோலாக மாத்திரம் இருந்தாள். அவன் அவளைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றான். மெல்லத் தத்தித் தத்தி நடைபாதையில் பரவியிருந்த கல்லின்மேல் இருந்தான். அவளும் அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
அந்த ஐஸ்க்ரீம் கடையில் வேலைபார்க்கும் இரண்டு பையன்கள் அவர்களை நோக்கிவந்து கொண்டிருந்தனர். ஒருவன் கையில் ஐஸ்க்ரீமும் மற்றவன் கையில் மருந்துப் பெட்டியும் தண்ணீர் போத்தலும் இருந்தது.
"அக்கா, அண்ணா உங்களுக்கு எதுவும் இல்லையே!" என்றபடி கையில் இருந்த போத்தலை அவளிடம் கொடுத்தான் அந்தப் பையன். பிறகு மண்டியிட்டு அரவிந்தனின் சிராய்ப்புக்கு மருந்து போட்டுவிட்டான்.
"ரொம்ப நன்றி தம்பி."
"அண்ணா வழமையா இந்த ரோடு பரபரப்பா இருக்கும், இந்த நேரம் ஆஸ்பத்திரியில சேர்த்திருப்பினம், ஆனா இண்டைக்கு ஒரு சனம் இல்ல, எங்களால முடிஞ்ச உதவி." என்று சொல்லி கொண்டிவந்திருந்த ஐஸ்க்ரீமை அவர்கள் கையில் திணித்து விட்டு அவர்கள் இருவரும் திரும்பிப் போனார்கள்.
அவர்கள் கொடுத்துவிட்டுச் சென்ற ஐஸ்க்ரீமை குடித்து முடிக்கும் வரை அதே இடத்திலேயே இருந்து குடித்தனர்.
"கெளம்புவமா குஞ்சம்மா?"
"இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரம்…"
"இஞ்சயா?"
"இஞ்ச வேண்டாம், பின்னால பீச்ல இருப்பம்."
"இன்டைக்கு காத்துக் கூட குஞ்சம்மா…"
"ப்ளீஸ் மாமா, ப்ளீஸ் ப்ளீஸ்" அவள் கெஞ்சல்களுக்கு அவன் செவிகளைக் கொடுத்தான்.
மெல்ல எழுந்து ஒருவருக்கு மற்றவர் தாங்கலாக ரயில் தண்டவாளங்களைக் கடந்து சென்று கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டனர்.
"மாமா, கொஞ்சம் விட்டிருந்தா ரெண்டு பேரும் ஒன்டாவே செத்திருப்பம் என்ன."
"குஞ்சம்மா…" அவன் குரல் தழுதழுத்தது.
அவள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என நினைத்தவன். அவள் கண்களுக்குள் தன் பார்வையைச் செலுத்தினான். அவள் கைகளைக் தன்னிரு கைகளோடு பிணைத்துக்கொண்டான்.
"இஞ்சபார் குஞ்சம்மா… இனிமே ஒருக்காலும் இப்பிடிக் கதைக்காத… நாங்கள் ஒன்டா சாகிறதுக்குப் பிறக்கேல்ல…"
அவளுக்குத் தான் உரைத்த வார்த்தையின் பூரண அர்த்தம் இப்போது புரிந்தது. தனக்குள் தன்னையே வைந்து கொண்டாள்.
"எனக்கு வாழ்க்கை எப்பவோ முடிஞ்சு போயிருக்க வேண்டியது. நீ அதுக்குள்ள வந்திருக்காட்டி வெறுமனே காவோலையாப் போயிருப்பன்…" குரல் தழுதழுக்க எச்சிலோடு சொல்ல வந்தவற்றையும் மென்று விழுங்கினான்.
அதைத் தொடர்ந்து கொஞ்சநேரம் அந்த இடத்தை மௌனம் அடைத்துக்கொண்டது. கடலின் அலைகள் ஆரவாரமாக அடித்துக் கொண்டிருந்தது. அவன் அந்த அலைகளின் அழகில் அவன் மனதில் இருந்த பாரங்களை மெல்ல இறக்கி வைத்துக்கொண்டு இருந்தான்.
அவளோ அவனையே அருகிலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். அவனுக்குக் கடல் பிடிக்கும் என்பதை அவள் அறிவாள். அந்த இடமே அவனோடு பேசுவதற்குச் சரியான இடம் என்பதை தீர்மானித்து வைத்திருந்தாள். இரண்டு வாகனங்கள் அவர்களிருவரையும் மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்றிருந்தது அவள் மனதை ரொம்பவும் பாதித்து இருந்தது.
அவள் அவன் கைகளின் மேல் தன் கைகளை வைத்துக் கொண்டாள்.
"மாமா கடல் நல்லா இருக்கெல்லா"
"ஓம் குஞ்சம்மா, எப்பவும்…" என்றபடி அவள் கையைப் பற்றிக்கொண்டான். திரும்பி அவள் நெற்றியின் மேல் முத்தமிட்டு எழுந்தான்.
"கடல்ல கால் நனைச்சுட்டு வாறன் குஞ்சம்மா…" அவன் அவளை கடந்து செல்கையில் சேர்ந்திருந்த கைகளை விட மறுத்தாள்.
"நீயும் வாறியா?"
"இல்ல மாமா… கால் அடிபட்டு இருக்கு கவனம்."
"குஞ்சம்மா…" என்றவன் முட்டி போட்டு அவள் முன்னால் அமர்ந்தான்.
அவளிரு கைகளையும் பற்றிக்கொண்டான். அவற்றை எடுத்து மென்முத்தம் ஒன்று வைத்தான். அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"குஞ்சம்மா… அந்தக் கடல் எப்பவும் எங்கள கவனமா பார்த்துக்கொள்ளும்… அதுக்கும் இந்த கரைக்கும் இருக்கிற பந்தம் மாதிரி… எங்களையும் எப்பவும் கைவிடப் போறது இல்ல. அதே மாதிரி நானும் எப்பவும்…" என்று அவளைத் தாவி அணைத்துக்கொண்டான்.
அவன் கடலுக்குள் போவதையும் திரும்ப ஓடிவருவதையும் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தாள். இன்றைக்கு அவன் கால்களில் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது. ஆனாலும் கடலோடு குலாவிக் கொண்டிருந்தான்.
"மாமா…" அவன் காதுகளுக்குக் கேட்குமாறு கத்தி அழைத்தாள்.
"சொல்லு குஞ்சம்மா…"
"உனக்கு ஞாபகம் இருக்கா… முதல் முதல்ல நாங்க எங்க சந்திச்சம் என்டு…"
அவளிடத்தில் திடீரென்று அந்தக் கேள்வியை எதிர்பாராதவன் அப்படியே திரும்பிப் பார்த்தான்.
கடலில் பெரிதாக வந்த அலை ஒன்று அவனை முற்றாக நனைத்து விட்டுச்சென்றது.
😟💙👌🏻
ReplyDeletegood job man
ReplyDeleteAdi Moli 👌
ReplyDeleteSemma😍😍😍🔥
ReplyDeleteMan..😍😍😍😍😍🔥
ReplyDelete❤
ReplyDeleteஇது என்ன புது ட்விஸ்ட்🤔...
ReplyDeleteஅது ஒரு புறம் இருக்க, எழுத்தாளர் இம் முறையும் வாசகர்களை தன் பக்கம் இழுக்க மறக்கவில்லை❤️🔥..
அடுத்த பகுதிக்கான காத்திருப்பு அதிகரித்துவிட்டது❤️
கதை இங்குதானாரம்பம் போலும்❤️😍
ReplyDelete