அப்பா..!

அந்த நாள் விடியல் காணாமல் இருந்து இருக்கலாம். அன்றேல் நான் உறங்காமல் இருந்திருக்கலாம். அவளுடைய கதறல்கள் எங்கோ தொலைதூரத்தில் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதைப் போல் கேட்டுக்கொண்டு இருந்தது. அந்தச் சத்தம் அருகாமைகளில் கேட்கத் துவங்கும் போது லேசாக முழிப்புத்தட்டியது. ஊரடங்கின் விளைவாக என்னுடைய அதிகாலையில் காலை பதினொன்றிலிருந்து எட்டாக மாறிவிட்டிருந்தது. அதாவது தூக்கமின்மை என்கிற வியாதி என்னுள் பரவத்துவங்கியிருந்தது. சிறிய சத்தமும் இலகுவில் என்னை விழிப்படையச் செய்துவிடும். அவளுடைய சத்தம் சிறிய அளவிலான சத்தம் அல்ல. அவள் ஜீவன் அவளைவிட்டுப் பிரிகின்றது போல ஒரு சத்தம். எதையாவது பரண் மேலே இருந்து எடுக்க எத்தனிக்கையில் அவள் விழுந்து கதறுவது வழமையான ஒன்று. அவள் விழுந்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் கதறல்கள் காதுகளை வந்தடையவும் நித்திரையை துறந்து ஓடிச் சென்றேன். அவள் கீழே விழுந்து இருந்து கதறிக்கொண்டு இருந்தாள். "இப்ப எத எடுக்க ஏறி விழுந்தநீ? - கொஞ்சம் கவனமா இருக்க வேண்டியது தானே!" என்ற படி அவளை தூக்க முயற்சித்தேன். அவளுடைய கவனமெல்லாம் அவள் விழுந்திருந்த இடத்திற்கு அருகே படு...