அப்பா..!




அந்த நாள் விடியல் காணாமல் இருந்து இருக்கலாம்.

அன்றேல் நான் உறங்காமல் இருந்திருக்கலாம்.

அவளுடைய கதறல்கள் எங்கோ தொலைதூரத்தில் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதைப் போல் கேட்டுக்கொண்டு இருந்தது.

அந்தச் சத்தம் அருகாமைகளில் கேட்கத் துவங்கும் போது லேசாக முழிப்புத்தட்டியது.

ஊரடங்கின் விளைவாக என்னுடைய அதிகாலையில் காலை பதினொன்றிலிருந்து எட்டாக மாறிவிட்டிருந்தது. அதாவது தூக்கமின்மை என்கிற வியாதி என்னுள் பரவத்துவங்கியிருந்தது. சிறிய சத்தமும் இலகுவில் என்னை விழிப்படையச் செய்துவிடும்.

அவளுடைய சத்தம் சிறிய அளவிலான சத்தம் அல்ல. அவள் ஜீவன் அவளைவிட்டுப் பிரிகின்றது போல ஒரு சத்தம். எதையாவது பரண் மேலே இருந்து எடுக்க எத்தனிக்கையில் அவள் விழுந்து கதறுவது வழமையான ஒன்று. அவள் விழுந்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் கதறல்கள் காதுகளை வந்தடையவும் நித்திரையை துறந்து ஓடிச் சென்றேன்.

அவள் கீழே விழுந்து இருந்து கதறிக்கொண்டு இருந்தாள்.

"இப்ப எத எடுக்க ஏறி விழுந்தநீ? - கொஞ்சம் கவனமா இருக்க வேண்டியது தானே!" என்ற படி அவளை தூக்க முயற்சித்தேன்.

அவளுடைய கவனமெல்லாம் அவள் விழுந்திருந்த இடத்திற்கு அருகே படுத்திருந்த அப்பாவைச் சுற்றியே இருந்தது.

"அப்பா எழும்புங்கோ! அப்பா! அப்பா!" என்ற படியாக கதறிக்கொண்டு இருந்தாள்.

"அம்மா! இப்ப என்னத்துக்கு அவர எழுப்புற, அவர் படுக்கட்டும். ஆஸ்பத்திரிக்கு போகோணும் எண்டவரெல்லா? கொஞ்சம் படுத்திட்டு எழும்பி போகட்டும்! நீ எழும்பு!" என்றேன் நான்.

"அப்பா எழும்பிறாரில்ல" என்றாள் அவள்.

அம்மாவின் கதறலுக்குப் பின்னால் இருந்த விடயங்கள் மெதுவாய்ப் புரிய ஆரம்பித்தது எனக்கு.

அவளை சமாதானம் செய்யத் தோன்றவில்லை.

கத்தி அழுது விடத் தோன்றவில்லை.

எனக்கு எதுவுமே தோன்றவில்லை.

எப்போதும் அதிகாலைகளில் எழும்பிவிடுகிற மனிதன் சாந்த சொரூபியாக கவலைகள் ஏதுமில்லாமல் படுத்து இருக்கிறார். அவரை அவ்வளவு சாந்தமாக, கவலைகள் ஏதும் இல்லாமல் பார்க்க ஆசைப்பட்ட எங்களுக்கு அவ்வாறு பார்ப்பது ஏதோ போல இருந்தது.

அவருடைய காலைகள் அழகானவை. அதிகாலையில் எழுந்து வீடு கூட்டி, குளித்து விட்டு, வீட்டில் இருக்கிற அனைவருக்கும் தேநீர் தயாரித்து வைத்துவிட்டு, கடைக்குச் சென்று செய்திப் பத்திரிகையும் வீட்டுப் பாவனைக்குத் தேவையானவற்றையும் வாங்கி வந்துவிடுவார். கொரோனா காலத்திலும் கூட அவருடைய அந்தப்பழக்கம் மாறவில்லை. கடைகள் மட்டும் தெரு முனையில் நிற்கும் கனரக வாகனமாகிப் போய் இருந்தது. அதற்கும் அவரே சென்று விடுவார். பாரமான பொதி சுமக்க மாட்டார். அதற்கு மட்டும் எங்களைக் கூட்டிச் செல்வார் .

என்னுடைய அதிகமான காலைகள் விடிந்தது அவருடைய முகத்தில் தான். அவர் தான் என்னுடைய முன்மாதிரி. என்னுடைய கதாநாயகன். என்னுடைய குரு. என்னுடைய சிறந்த நண்பன். எனக்கு மட்டுமென்று இல்லை என்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே அவரும் ஒரு நண்பன். என்னுடைய உடன்பிறந்தவர்களை விட அவருக்கு என்னுடனான நெருக்கம் அதிகமானது. எனக்காக மட்டுமே அவருடைய காலத்து வழக்கங்களில் இருந்து தன்னை மாற்றிக்கொண்டு என்னை ஆதரித்து இருக்கிறார். இந்த சலுகை வீட்டின் மற்றய அங்கத்தவர்கள் பெறத் தவறிவிட்டனர் என்றது இன்னமும் சிறப்பான விடயம்.

அப்படியாக எல்லாம் என்னுடன் இருந்தவர். பேச்சு மூச்சற்று படுத்துக்கிடந்தார்.

அவரின் கைகளைப் பிணைத்தபடி அம்மாவும், அவரைச் சுற்றி மற்றய சகோதரர்களும் அழுது கொண்டிருந்தனர்.

வீட்டின் கூடத்தைக் கடந்து, அறையைக் கடந்து வெளியே தாழ்வாரத்தின் ஒரு மூலையில் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டேன்.

அவரிடம் கடைசியாகப் பேசிய விடயங்கள் என் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.

"அப்பா நான் செமெஸ்டர் பிரேக் எடுக்கவே?"

"ஏன்டா ஏதும் பிரச்சினையே!"

"பிரச்சினை ஒண்டுமில்ல. அந்த இந்தியாவில கொரோனா கூடிக்கொண்டே போகுது. ஸ்கொலர்ஷிப் விசயம் என்ன மாதிரி எண்டு ஒண்டும் சொல்லேல அவையள். அதுதான் இப்ப படிகிறத ஒரு ஆறு மாசம் நிப்பாட்டி வெக்கலாம் எண்டு."

"ஏன் இப்ப படிக்கிறத நிப்பாட்டுற? அத தொடந்து படி, இந்தியா வரேக்க போகலாம்."

"இதுக்கு லட்சத்தில கட்டிப்போட்டு, இத விட்டுட்டு போகச்சொல்லுறியளே?"

"நீ ஒண்டையும் யோசிக்காத. இப்ப பிடிக்கிறத படி. பிறகு மற்றத பாப்பம். நீ யோசிக்காத."

இவ்வாறாக அமைந்திருந்தது அவருடனான எனது கடைசி உரையாடல்கள். முதல்நாள் இரவு நன்றாகப் கதைத்து சிரித்துக்கொண்டு இருந்தவர். பேச்சற்றுப் படுத்திக்கிடக்கிறார்.

அந்த தாழ்வாரம் எனக்கு அழுவதற்கான சகல வசதிகளையும் செய்து தந்துகொண்டு இருந்தது.

சித்தியின் எண்ணிற்கு அழைத்து, "சித்தி! அப்பா... அப்பாக்கு..." என்று துவங்க முன்னமே என்னுடைய குரல் அடைத்துப் போனது. கண்களின் இருந்து முதல் துளி கண்ணீர் வெளியே வந்தது.

சந்தோசமோ! கவலையோ! அவற்றை தனிமையில் கொண்டாடப் பழகியிருந்தேன். இதுவும் அவரிடம் இருந்து தான்.

என்னுடைய உயர்தரப் பெறுபேறுகள் வந்திருந்த நேரம் அவருடைய நண்பர்களுக்கெல்லாம் எடுத்துச்சொல்லி பெரிதாகக் கொண்டாடி இருந்தார். என்னுடைய பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வந்த நேரம் நிலைமை தலைகீழாகிப் போய் இருந்தது. என்னை இலங்கையில் இருந்த எந்த ஒரு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவு செய்திருக்கவில்லை. அந்தவொரு பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் ஒரு வருடங்கள் என்னோடு சேர்ந்து காத்திருந்தவர் அவர். தன்மகன் தன்குடும்பத்தில் முதலாவதாக பல்கலைக்கழகம் சென்று பயிலப்போகிறான் என்று பலமுறை கர்வப்பட்டுக் கூறிக் கேட்டிருக்கிறேன். இரண்டு ஏ ஒரு பி என்ற பெறுபேறு என்பது ஒன்றுமே இல்லை என்பதுவும் யாரோ ஒருவர் நம்மேல் கொண்ட குருட்டுத்தனமான நம்பிக்கையை எவ்வளவு வலிமையானது என்பதையும் உணர்ந்து கொண்டது அதற்குப் பின் தான்.

அந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் எனக்காகத் தனிமைகளில் அழுதும் வருந்தியும் இருக்கிறார். நான் தூங்கிய பிற்பாடு என்னருகில் அமர்ந்து படியான அம்மாவுடனான உரையாடல்களில் ஒன்று தவறுதலாக நான் கேட்டதில் தான் அறிந்து கொண்டேன்.

"அப்பா வந்து சாப்பிடுங்கோ!"

"வை நான் கொஞ்சத்துல வாறன்."

"அவனுக்குப் பக்கத்தில இருந்து என்ன செய்யிறியள்?"

"இல்ல, எப்பவும் சிரிச்சுக் கொண்டு இருக்கிறவன் முகத்தில சிரிப்பை பார்த்தே கனகாலம் ஆகுது."

"அப்பா, அவனுக்குப் பக்கத்தில இருந்து நீங்கள் அழாதீங்கோ! எழும்பினா இதுக்கும் சேர்த்து அழுவான்."

"எப்பவும் அங்கபோப்போறன் இங்கபோப்போறன் அது செய்யவே இது செய்யவே எண்டு கொண்டு இருக்கிறவன். கொஞ்சநாளா இந்தக்கட்டில விட்டு இறங்குறானே இல்ல. எதையோ யோசிச்சுக்கொண்டு இருக்கிறான். நிறைய அழுறான். இவன இப்பிடிப் பாக்கேலாமல் கிடக்கு."

"இஞ்ச அப்பா, அழாதேங்கோ. அவனோட நான் கதைக்கிறன். இப்ப தான் படுத்தவன் எழும்பிடுவான் வாங்கோ அங்கால"

நான் நித்திரை என நினைத்து என்னருகில் நடந்த உரையாடல் இது. இதைத்தவிர்த்து இன்னும் இருந்தவைகள் நான் அறியாதவை.

அவரிடமிருந்தே உணர்வுகளுடனான பந்தத்தை தனிமையிலேயே வைத்திருக்கப் பழகிக்கொண்டேன்.

அந்தத் தாழ்வாரத்தின் மூலை நிறைய கண்ணீரைப் பார்த்து இருக்கின்றது. எங்களுடைய வீட்டின் தனிமையான பகுதி என்றால் அதையே சொல்லலாம்.

ஊரடங்கு துவங்கிய பிற்பாடு அந்தப் பகுதிக்கான தேவை பெருவாரியாகக் குறைந்தே இருந்தது. வீட்டின் அனைத்து அங்கத்தவர்களும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம். மனஆறுதல்களுக்காக தனிமையான இடத்தையோ சினிமாப் பாடல்களையோ நாடியிருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

வருடங்களுக்கு முன்னர் தொலைத்த குடும்ப நேரங்கள் மீண்டும் கிடைத்துக்கொண்டு இருந்தது. குடும்பமாக அமர்ந்திருந்து கதைப்பது. விளையாடுவது. சிரிப்பது. நகைப்பது. படம்பார்ப்பது என குடும்ப நேரம் அதிகரித்து இருந்தது. உண்மையில் அதுபோன்ற மகிழ்ச்சியாக இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அந்த இரண்டு மாத சந்தோசம் வாழ்நாள் திருப்தியை பறித்துவிடும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

அவரால் அம்மாவையும் எங்கள் நால்வரையும் பிரிந்து ஒருநாள் கூட இருக்க முடியாது. ஊரடங்கு அவரை பொருளாதார அளவில் கஷ்டத்திற்கு உள்ளாக்கினாலும் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியாக வைத்திருந்தது. அவருடைய உலகம் முழுதும் அவரைச் சுற்றியே இருந்த காலம் அது. என்னுடைய உயர்தரத்தின் போது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வீட்டை விட்டு வெளியே தங்கி இருந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஒன்று உருவானது. அல்லது படிப்பதற்காக உருவாக்கிக்கொண்டேன் என்று சொல்வது சிறந்தது. நண்பன் ஒருவனின் வீட்டில் தங்கி இருந்து படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு அப்பாவிடம் சொன்னேன்.

"அப்பா எக்ஸாம் வரைக்கும் நேசி வீட்ட போய் இருக்கவே! இவ்வளவு தூரம் வந்து போய் படிக்க மாட்டன் நான்."

"எனக்குப் பிரச்சனை இல்ல, நீ இருப்பியே அங்க?"

"ட்ரை பண்ணுறன்"

"சரி! எப்ப போகப்போற? கதைக்கோணும் எல்லா அவையோட?"

"நான் கதைச்சிட்டன், நீங்கள் சரி எண்டா இண்டைக்கே போறன்."

அவருடைய முகத்தின் மாறுதல்கள் அவருடைய கவலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின.

"சரி, நான் கதைக்கிறன், நல்ல நாள் பார்த்துப் போ, என்ன?"

"இண்டைக்கே நல்ல நாள் தான் மாமாட்ட கேட்டனான்."

அவருக்கு முழுதாக உடன்பாடு இல்லையெனிலும் எனக்காக ஏற்றுக்கொண்டார் என்பது நிஜம்.

அப்பாவிற்கு நான் சிறிய வயதில் இருக்கும் போதிருந்தே என்மேலான பிரியம் அதிகம். அது என்மேலான அக்கறைக்கு காரணம் என்றாலும். என்மீது இருக்கும் பாதுகாப்பு உணர்வானது என்னை அவரிடமிருந்து எப்போதும் தள்ளி வைத்தது இல்லை. அவர் ஒரு இருதய நோயாளி. இருபது வருடங்களுக்கு முன்னர் அவருக்கு முதல் முறை மாரடைப்பு வந்தபோது நான் கருவில் இருந்த குழந்தை. இந்த விடயம் கேள்விப்பட்டதில் இருந்து நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று எனக்கு உறுத்துதல் இருந்தபடியே இருக்கும். நான் கூட இருந்தால் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கிற பயம் என்னை அவர் அருகே செல்ல வைத்தது கூட இல்லை. என்னிடம் இருந்த குறையானது அவருக்கு என்மீதான அக்கறைகளை வெகுவாக அதிகரித்து இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சிகிச்சைக்கு வந்த போதுகளில் அவருடன் சேர்த்து என்னையும் சிகிச்சைக்காக அழைத்து வந்ததாகச் சொல்வார்கள். எனக்கும் கொஞ்சமாக ஞாபகம். அப்போதிருந்து தனியாக என்னை எங்கேயும் அனுப்புவதில்லை. அனால் என் விருப்பங்களுக்கும் மறுப்பு தெரிவிப்பதில்லை.

நண்பனின் வீட்டிலிருந்த நாட்களில் வாரத்துக்கு ஒருமுறையோ இருமுறை மாத்திரமே அவருடனான உரையாடல்கள் இருக்கும். அம்மாவை அவள் வேலை செய்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவேன். அப்பாவைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் அவரோ ஏதோ காரணங்கள் கற்பித்துக்கொண்டு நண்பன் வீடுவரைக்கும் வந்து பார்த்துவிட்டுச் செல்வார். கூடவே ஒவ்வொரு நாளும் நண்பனின் அம்மாவிடம் என்னைப்பற்றி விசாரித்துவிடுவார் என்று ஒருமுறை நண்பனின் அம்மா சொல்லிக் கேட்டதுண்டு.

கொஞ்ச நேரத்துக்குக் கூட என்னை தனியே விட்டு விடாதவர் ஒரு நீண்ட நெடிந்த பயணத்தில் தனியே விட்டு விட்டு எங்கோ தொலைந்து போய்விட்டார்.

போவதற்கு முதல் நாள் கூட அவருடைய நடைபழகும் நேரத்தில் அவருடைய அயல்வீட்டு மருத்துவ சிநேகிதரிடம் ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டுத்தான் போய் இருக்கிறார். என்னுடைய இரண்டாவது மகனுக்கு இருதயத்தில் சிறிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. அவன் மருத்துவமனைகளையும் வைத்தியர்களையும் வெறுக்கிறான். எப்படியாவது அவனுடைய பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். அவனுடைய மேற்படிப்புக்களை வெளிநாட்டில் தொடர்வதற்கு அவன் உடல்நிலை அவனுக்குப் பிரச்சினையாக இருக்கக்கூடாது. நீங்கள் தான் அவனை சம்மதிக்க வைத்து மருத்துவம் பார்க்க வேண்டும். என்றாக அவருடைய விண்ணப்பம் இருந்ததாக அந்த மருத்துவரின் வாயினாலேயே அறிந்து கொண்டேன்.

அவருடைய இயலுமைகளையும் மீறி எனக்கான வாழ்க்கைப்பாதையை அமைத்து வைத்துவிட்டு என்னுடனான பயணத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார். போகும்போது கூட என்னுடைய முதல் பட்டப்படிப்புக்கான பணம், உடல்நிலைக்கான வழிகாட்டல், அவரில்லாத இடத்தை நிரப்பக் கூடிய அளவு மனிதர்களை எனக்காக விட்டுத் தந்துவிட்டுச் சென்றுள்ளார்.

அவருடைய இறுதி நாளில் கொரோனா ஊரடங்கிலும் கூட அத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அவர் சேர்த்துவைத்திருந்த சொந்தங்கள் வீடுவரை அவரைப் பார்த்துவிட்டுப்போக வந்திருந்தனர். அவர்கள் எல்லாரும் சொன்ன ஒரே ஒரு விடயம்.

"எங்கள மாதிரி இன்னும் நெறய பேருக்கு வாழ வழி காட்டினவர், பெத்த பிள்ளையள் உங்கள தனியா விட்டுட்டு போடுவாரா என்ன?"

உண்மை தான். எங்கிருந்தோ எங்களை வழிநடத்திக்கொண்டு தான் இருக்கப் போகிறார். பழகும் ஒவ்வொருத்தரிடத்திலும் இருக்கும் அவரின் ஏதோ ஒரு இயல்பு அவரை ஞாபகப்படுத்திக்கொண்டு தான் இருக்கும்.

அந்தத் தாழ்வாரம், அந்தக் கட்டில், அவர் வாசித்த புத்தகங்கள், அவர் சந்தித்த நபர்கள், அவர் போட்டுத்தந்த தேநீர், அவர் சொன்ன கதைகள் எல்லாம் நினைவில் இருந்தாலும், அவரிடம் இருந்து நான் எடுத்துக்கொண்ட இடைவெளிகளும், இறுதிவரைக்கும் அவரை அணைத்தது இல்லை என்கிற குற்ற உணர்ச்சியும் என்னை வருத்திக்கொண்டே இருக்கும். இருக்கும் வரையிலும் அவரை கொண்டாட மறுத்த நான் அதிர்ஷ்டமில்லாதவன் தான்.

அவரின் ஸ்பரிசத்தின் வெம்மைகளை இறுதி வரையிலும் உணராமலேயே அவருக்குக் கொள்ளி வைத்த அதிர்ஷ்டமில்லாதவன் தான் நான்.


Comments

  1. அப்புடியே என்னை.அந்த இடத்தில் வைத்து பார்த்த மாதிரியே இருக்கு. உணர்ச்சிகள் ததும்பும் கதை

    ReplyDelete

  2. கண்ணீர்...
    நல்ல மனிதரை இழந்த வலிகள் எம் பக்கம்...
    நல்ல தகப்பனை இழந்த தீராத வலிகள் உன் பக்கம்...
    உணர்வுகள் வார்த்தைகள் வழி எம்முள் நுழைய தவறவில்லை உணராத வலிகள்.. உணர வாய்க்கப்பட்டேன்😔

    ReplyDelete
  3. இழப்பின் அருமையை புரிய வைக்கும் கதை

    ReplyDelete
  4. Prashadi KrishnamoorthyFebruary 20, 2023 at 11:43 PM

    நிகழ்வுகள் வேறெனினும் உணர்வுகள் ஒன்றென உணர்த்தியது உங்கள் எழுத்து...👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவளதிகாரம் | வேணி

முகாரி ராகம்

நீ பார்க்கும் பார்வைகள் 3

நீ பார்க்கும் பார்வைகள் 2