முகாரி ராகம்
BASED ON A TRUE STORY
சரோவின் முகத்தில் பயத்தின் ரேகை படிந்து இருந்தது. கண்ணீர் கன்னங்களில் வடிந்து உலர்ந்து இருந்தது. பேய் அறைந்தாற்போல் நாள் முழுதும் அமர்ந்திருந்தாள் வசந்தி. அவளுக்கு அன்று முழுவதும் எந்த வேலையும் ஓடவில்லை. எதையோ அடிக்கடி எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது. காய்ச்சல் பற்றி எரிந்தது. காட்டிக்கொள்ளவில்லை. விடியக் காலை வேலைக்கு வந்தவள் பின்னேரம் வேலைநேரம் முடியும் வரைக்கும் இரண்டு மூன்று தடவை தேம்பி தேம்பி அழுதிருப்பாள். யார் கேட்டும் எதுவும் சொல்லவில்லை. பின்னேரம் வேலை முடிந்து சைக்கிளை எடுக்கையில் அவளுடைய கண்கள் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீரை சொரிந்து கொண்டு இருந்தது. அவளால் அதை நகர்த்த முடியவில்லை. அத்தனை இயலாமை. சோர்வு தோய்ந்த குரலில் விம்மி அழத் துவங்கினாள். விம்மல் கொஞ்சம் கொஞ்சமாய் கதறலாக மாறியது.
சரோவின் தோள்களை ஒரு கை தொட்டது. அவளுடைய இதயத்துடிப்பு ஒருகணம் நின்று மீண்டும் ஒலித்தது. பயந்துவிட்டாள். மெல்லிய குரலொன்று “சரோ” என்று கூப்பிட்டது. அவள் முகம் சற்று சமாதானம் கொண்டு திரும்பி அந்த கைக்கு சொந்தகாரியை ஏறிட்டது. அவளின் கண்கள் அந்த உருவத்தை கண்ட மாத்திரத்தில் கைகள் எதிரில் இருந்தவளை அணைத்துக் கொண்டது. “கிருஷ்ணா அக்கா” என்று துவங்கியவளை சமாதானம் செய்தது அந்த உருவம்.
சரோவை சமாதானம் செய்து சைக்கிளை எடுத்துக்கொண்டு சரோவையும் கூட்டிக்கொண்டு கிளம்பிய கிருஷ்ணவேணி மனம் அவளின் அழுகைக்கான காரணம் அறிய துடித்துக்கொண்டு இருந்தது. நாள் பூராவும் அழும் அளவு என்ன நடந்தது? அதுவும் பயந்து பயந்து அழும் அளவுக்கு… கல்யாணம் வேறு ஆகி இருக்கவில்லை சரோவிற்கு. வீட்டுக்காரர் கொடுமையாக இருக்காது. வீட்டில் அவ்வளவு கஷ்டமான சூழலும் இல்லை. கிருஷ்ணாவிற்கு தலை வெடித்துவிடும் போல் இருந்தது. அவளால் வாய் திறந்து கேட்க முடியவில்லை. கேட்கப்போய் மீண்டும் அழத் துவங்கினால் சமாதானம் செய்யவும் அவளிடம் தெம்பில்லை.
“சரோ, இங்க பாரு” எனத் துவங்கினாள் கிருஷ்ணா. “அக்கா, உங்களிட்ட ஒரு விசயம் சொல்லோனும். நேற்று பின்னேரம் வல்வெட்டி சந்தியில ஆமிக்காரன் செல் அடிச்சு யாழ்ப்பாணத்துல இருந்து இடம்பேர்ந்து வந்திருந்த அண்ணனும் தங்கச்சியும் அந்த இடத்திலையே செத்துபோச்சினம். அதுவும் என்ர கண்ணுக்கு முன்னால, பார்த்துக்கொண்டு இருகேக்க. கண்ணை மூடினா அதுதான் வந்து நிக்குது.” என்று முடித்தாள் சரோ.
1995 நவம்பரில் யாழ்ப்பாணத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் வெடிக்கும் செல் சத்தங்கள் கேட்கும். வடமராட்சி என்றால் சொல்லவே தேவையில்லை. அங்கிருப்பவர்களுக்கு பழகி போய் இருந்தது. கிருஷ்ணாவிற்கும் அப்பிடித்தான். ஆனாலும் சாவை அவள் கண்களால் கண்டதில்லை. சாவுச் செய்திகள் கேட்டதுண்டு. சாவை நேரில் பார்த்துக் கேட்ட செய்தி சரோ சொன்ன செய்தி தான்.
கிருஷ்ணாவின் எண்ணங்களை ஆக்கிரமித்துக் கொண்டது அந்தச் செய்தி. இதற்கு முன் எத்தனையோ சாவுச் செய்தி கேட்டு இருக்கிறாள். ஆனாலும் அந்தச் செய்தி அவளை ஏதோ செய்துவிட்டது. யாரையோ இழந்துவிட்டது போல் ஒரு உணர்வு. அந்தநாள் வரை அவள் கேட்டிருந்த செல் சத்தங்கள் எல்லாம் யாரோ சிலருடைய உயிர்களை குடித்து விட்டிருக்கும் தானே? யாரோ ஒருவர் அவர்களின் உறவை இழந்து நிற்கதியாய் நிற்கும் தானே? என்றெல்லாம் அவளுடைய மனம் எதையெதையோ நினைத்து அல்லல்பட்டது.
ஒருவாறாக தன்னைச் சமாதானம் செய்துகொண்டு சரோவையும் அவளுடைய வீட்டிற்குச் செல்லும் சந்தியில் விட்டுவிட்டு அவள் செல் விழுந்ததாகக் கூறிய சாலையையும் பார்த்தபடி சைக்கிளை தனது வீட்டைநோக்கிச் செலுத்தினாள் கிருஷ்ணா. அவளுடைய ஆழ்மன எண்ணங்கள் அவளிடம் இருந்த நிதானத்தை பிடுங்கிக்கொண்டது. அவளுடைய கண்கள் அந்த இருவருக்காக கண்ணீரைச் சிந்தியது. அவள் வீட்டை அடையும் போது பாதி ஜடமாகவே மாறிவிட்டிருந்தாள்.
வேலைவிட்டு வந்தவள் குளித்துமுடித்து வருவதற்குள் சிவகுமரனும் வீட்டை அடைந்திருந்தான். சிவாவின் முகம் முழுவதும் பதட்டம் படிந்திருந்தது. சிவா ஒரு முன்கோபி. எப்போதும் பதட்டமாகவே இருப்பவன் அவன். அதனாலேயே என்னவோ அவன் பதட்டத்தை சட்டை செய்யவில்லை அவள்.
"அப்பா குளிச்சிட்டு வாங்கோவன், தேத்தண்ணி போடுறன்"
"வெளிக்கிடு, வெளில போறம்" என்றபடி துடைக்கும் துண்டை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக கிணத்தடியை அடைந்தான்.
அந்த ஒற்றைத் துவிச்சக்கரவண்டியில் கிருஷ்ணாவை ஏற்றிக்கொண்டு அந்த ஒற்றைப் பாதையில் சென்றுகொண்டிருந்தான் சிவா.
"இப்பவாவது சொல்லுங்கோவன் எங்க போறம் என்டு"
சிவாவிடம் பதிலேதும் இல்லை. அவன் கண்கள் சொரிந்த கண்ணீர் அவள் தோள்களில் சிந்திக்கொண்டிருந்தது.
"அப்பா, ஏனப்பா? என்ன நடந்தது?"
தொடர்ந்தும் மௌனம் மட்டுமே தொடர்ந்தது. அந்த மௌனம் கிருஷ்ணாவின் எண்ண ஓட்டங்களை சில காலங்களுக்கு முன்னர் அழைத்துச்சென்றது.
1992கள், "அக்கா, உன்னட்ட ஒரு விசயம் கேக்கோகணும்" என்றபடி கிருஷ்ணாவின் அருகில் வந்தமர்ந்தாள் விஜிதா. 92களில் பேருந்துகளும் மோட்டார் வாகனங்களும் இருக்கவில்லை. ஆண்களுக்கான சைக்கிளில் வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை தினசரி சென்றுவருவதெல்லாம் அன்றைய நடைமுறைக்கு ஒத்துவராதது.
"சொல்லு விஜி" என்றபடி கிருஷ்ணா தன்னுடைய மெக்கானிகல் வரைவுகளில் மூழ்கிப்போய் இருந்தாள்.
திருநெல்வேலி அருகாமையில் கிருஷ்ணா தங்கியிருந்த வீட்டின் அயல் வீட்டில் இருந்தவள் தான் விஜிதா. ஆரம்பத்தில் பெரிதாக இருவரினிடையிலும் பழக்கம் இல்லாவிடினும் நாளடைவில் மாறிவிட்டிருந்தது. கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லாத விஜிக்கு கிருஷ்ணாவின் அன்பும் அரவணைப்பும் பெரிய ஆதுரத்தை கொடுத்துக்கொண்டு இருந்தது.
"அக்கா, காதல பத்தி என்ன நெக்கிறீங்கள்?"
"ஏன்டி திடீரென்டு காதல பத்தி கேக்கிற?" வரைவுத் தாள்களிலிருந்து பார்வையைத் விஜியின் பக்கம் திருப்பினாள் கிருஷ்ணா.
விஜியின் முகம் வெட்கத்தில் நாணியது. விஜிக்கு பதினெட்டு வயதே ஆகியிருக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அந்த வயதில் எல்லாருக்கும் வருகிற ஞாயமான சந்தேகம் தான். அந்த சந்தேகத்திற்கு விளக்கம் தேடி கிருஷ்ணாவிடம் வந்திருந்தாள் விஜி.
"அதுவந்து அக்கா"
"சரி சரி இழுக்காத நான் ஒன்டும் கேக்கேல்ல" என்று சிரித்துவிட்டு, "அதைப்பத்தி நான் என்ன நெக்கிறன் என்றத விட நீ என்ன நெக்கிற என்டது தான் விசயம். சும்மா யோசிச்சு குழம்பாத. வா சாப்பிடப்போவம்." என்று விஜியையும் கூட்டிக்கொண்டு விஜியின் வீட்டை அடைந்தாள் கிருஷ்ணா.
கிருஷ்ணா அங்கு தங்கியிருந்த காலத்தில் பெரும்பாலான நாட்களில் அவளுடைய உணவுகளை விஜியின் அம்மாவிடமிருந்து வாங்கிக்கொள்வாள். விஜியின் அம்மா அந்த சுற்றுப்புறத்தில் வந்து தங்கிப் படிக்கும் வேலைக்குப் போகிறவர்களுக்கு சாப்பாடு செய்து கொடுப்பவள். ராத்திரி உணவுகளை நேரம் கிடைக்கும் பொழுது களில் விஜியின் வீட்டிலிருந்து கதைத்துக்கொண்டே சாப்பிட்டு விடுவாள் கிருஷ்ணா.
இவர்கள் மூவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது திடீரென உள்ளே வந்தவன். "அத்தை அம்மாவோட கத்திப்போட்டன் இன்டைக்கு அங்க படுக்கேல்ல, திண்ணைல படுக்கிறன் என்ன" என்றபடி பாயை எடுத்துக்கொண்டு திரும்பினான் சசிகரன்.
"மெய்யே சசி, சாப்பிட்டியே?" என்றாள் விஜி அம்மா.
"ஓமோம் அத்தை. அப்பவே சாப்பிட்டன். நான் போய் படுக்கிறன். விடிய வெள்ளன எழும்போனும்." என்றபடி சென்று படுத்துக்கொண்டான்.
விஜியின் வீட்டிற்கு மூன்று வீடு தள்ளியிருந்த வீட்டின் நான்கு பிள்ளைகளில் மூத்த பிள்ளை சசிகரன். விஜி அந்த வீட்டிற்கு குடிவந்த காலத்தில் இருந்து சசிகரனும் அந்த வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டிருந்தான். விஜி அம்மாவுக்கு கூட இருந்து எல்லாமே செய்து கொடுப்பான்.
கிருஷ்ணா, விஜியின் கண்களில் தெரிந்த மாற்றத்தைக் கவனிக்கத் தவறவில்லை.
சசிக்கு விஜியிடம் எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்ததுண்டு. விஜியை விட வெறும் இரண்டே வயதுகள் தான் அதிகம் சசிக்கு. ஆனால் அவனுடைய நடத்தைகள் அவன் வயதிற்கு அதிகமானதாகவே இருக்கும். தன்னுடைய குடும்பத்தை விட விஜியினுடையதில் அதிக கவனம் செலுத்துவான். அவனுடைய வீட்டில் வருகிற சண்டைகள் அனைத்துமே இவர்கள் சம்மந்தமாக வருவது வழமை. அடிக்கடி அங்கே சண்டை போட்டுவிட்டு இங்கே வந்து படுத்துக்கொள்வான்.
அன்றைக்கு பிறகான நாட்களில் விஜியிடமும் சசியிடமும் நெருக்கங்களையும் அன்யோன்யங்களையும் கவனிக்கத் தவறவில்லை கிருஷ்ணா. விஜியும் சரி சசியும் சரி அத்துணை அழகாக அமைதியாக தங்கள் காதல் அத்தியாயத்தினைத் துவங்கி இருந்தார்கள். மாதங்கள் தேய்ந்திருந்தது.
"கிருஷ்ணாக்கா, அடுத்தவாரம் வீட்ட போறீங்களாம், விஜி சொன்னவள்." என்றான் சசி.
"ஓம் சசி, வீட்ட போறன். அடிக்கடி வருவன் என்டு நெக்கிறன். படிப்பு முடியேல்ல தானே"
"அண்ணாமார் அக்காமார் எல்லாரையும் கேட்டதாச் சொல்லிவிடுங்கோ. பிறகு சிவா சேரயும்"
"சொல்லி விடுறன்" சிரித்துக்கொண்டே சொன்னாள் கிருஷ்ணா.
"அக்கா இன்னொரு விசயம்"
"சொல்லு சசி"
"அதுவந்து அக்கா…"
சிலநேர யோசனைக்குப் பிறகு "விஜி சொல்லிச்சு, அம்மாட்ட வந்து தன்னை கல்யாணம் செஞ்சுதரச் சொல்லிக் கேக்க சொல்லிச்சு…"
"அத்தைட்ட போய் எப்பிடி கேட்கிறது, ஐயா அம்மைட்ட எப்பிடி சொல்லுறது என்டு யோசினையா இருக்கு. நீங்களும் வாற வாரம் போட்டியள் என்டா இதப்பத்தி ஆரோடையும் கேக்கேலாமல் போடும். அதான்" என்று இழுத்தான்.
சிவாவின் குரல் கிருஷ்ணாவை நிகழுலகத்திற்கு அழைத்து வந்தது.
"எங்க போறம் என்டு கேட்டநீ எல்லோ..."
சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, "வேலை முடிஞ்சு வாறவழில சசியைப் பார்த்தனான். அவனைப் பார்க்கத் தான் போறம் இப்ப"
"அதுக்கேன் அழுதனியள் அப்பா?"
அன்றைய தினத்துக்கு முன்னைய தினம் சசி விஜியையும் கூட்டிக்கொண்டு கிருஷ்ணாவின் வீட்டிற்கு வந்திருந்தான். இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இடம்பெயர்ந்தவர்களில் சசியும் விஜியும் விஜியின் அம்மாவும் அடங்குவர். சசியின் குடும்பத்தில் அனைவரும் தென்மராட்சியில் அவர்களுடைய உறவினர்கள் வீட்டுக்கு போய்விட்டதாகவும் இவர்கள் இங்கே வந்துவிட்டதாகவும் சசியின் மூலமாக அறிந்து கொண்டார்கள்.
"அக்கா நாங்கள் போட்டுவாரம் என்ன, இருட்டுறதுக்கு முன்னம் போகோணும். நாளைக்கு காலம சாவச்சேரி போகலாம் என்டிருக்கிறம். சேர் வரச்சொல்லிவிடுங்கோ" என்றான் சசி.
"கொஞ்சமிருந்து அவர் வரப் பார்த்திட்டுப் போங்கோவன்"
போவதற்கு தயாரானவர்களைப் பிடித்துவைத்திருந்து தேநீர் கொடுத்து, அவர் வந்த பிற்பாடு அவருடனும் சிறிது நேரம் உரையாடவைத்து பின்னர் கைச்செலவுக்கென்று கொஞ்சப் பணமும் கொடுத்து அனுப்பி வைத்திருந்தாள் கிருஷ்ணா. அவளுக்கு அத்துணை சந்தோசம் இருவரும் சேர்ந்து வந்துவிட்டுப் போனதில். அன்றைக்கு ராத்திரிப் பூராவும் அவர்களோடு இருந்த காலத்துக்கதைகளை சிவாவுடன் கதைத்துக்கொண்டு இருந்தாள்.
"அப்பா உங்களைத் தான் கேக்கிறேன்?"
"இஞ்ச அப்பா அவை இந்த நேரம் சாவச்சேரில சசி வீட்ட போயிருப்பினம் என்ன?"
"ஓம் போயிருப்பினம்" என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
தினசரி வடமராட்சியிலிருந்து சாவகச்சேரி வரை சைக்கிளில் வேலைக்குச் சென்று வந்துவிடுவான் சிவா. அன்றைக்கும் அதே போல வேலை முடித்துத் திரும்பிக்கொண்டு இருக்கையில் தூரத்தில் வந்த ஒரு சாதாரண காரின் மேல் சவப்பெட்டி ஒன்று வைத்துக் கட்டியிருந்தது தெரிந்தது. அந்த நாட்களில் அது சாதாரணமானது. குண்டடி பட்டோ செல்லடி பட்டோ உயிரிழப்பவர்களுக்கான அந்திமச் சடங்குகளை முறைவர நிறைவேற்ற முடியாது. அப்படியான நேரங்களில் இப்படியாக கொண்டு சென்று எரித்துவிடுவது உண்டு. மாறாக சிலபேரின் உடல்கள் அடிபட்ட இடத்திலேயே எரியூட்டப்படுவதும் உண்டு.
அந்த கார் கடந்து செல்கையில் உள்ளே இருந்த முகம் நன்கு பார்த்துப் பழகிய முகம்போல் இருந்தது. கார்க்கதவில் சாய்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் சிறு காயங்கள். காய்ந்து உலர்ந்துபோன ரத்தத் திட்டுக்கள். காயங்களோடு பார்த்த முகத்தை சிவாவினால் அடையாளம் காண இயலவில்லை.
கார் கடந்து போன பின் தான் ஏதோ ஞாபகம் வந்தவனாய் சைக்கிளை திருப்பிக்கொண்டு காரைத் துரத்தினான்.
"சசி, இஞ்ச டிரைவர் கார நிப்பாட்டுங்கோ... சசி... சசி... டிரைவர்..."
ரத்தக் காயத்தில் கதவில் சாய்ந்து உறங்கிக்கிடந்தது சசி. நேற்று சிரித்தமுகத்துடன் அவர்களிடம் இருந்து விடைபெற்ற அதே சசி. அது சசியென்று உணர்ந்த போது சிவாவினால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. மெதுவாகப் போய்க்கொண்டிருந்த காரை விரட்டிப் பிடித்தான் சிவா.
"சசி, சசி... டிரைவர் கார நிப்பாட்டுங்கோ..."
கார் நிற்கவும், சைக்கிளை நிறுத்தியவன் ஓடிச்சென்று சசி அமர்ந்திருந்த கதவைத் திறந்தான். சசியின் உடல் அப்படியே கீழே விழுந்தது. சசியின் உடல் குளிர்ந்துகொண்டிருந்தது. உடல் நீலம் பூத்திருந்தது. அந்த உடலைவிட்டு உயிர்பிரிந்து ஒருநாள் ஆகியிருக்கும். சிவாவின் கண்ணீரின் வெப்பம் சசியின் உடலில் கொஞ்சம் வெம்மையை சேர்த்தது. அதை அவனால் உணரத்தான் இயலவில்லை.
சசியைத்தூக்கி உள்ளே அமரவைத்துவிட்டு மறுபுறம் அமர்ந்திருந்த விஜியின் அம்மாவைப் பார்த்தான். அவள் பேசும் நிலையில் இருக்கவில்லை. பிரமை பிடித்தவள் போல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவளின் உடலில் உயிர் இருந்தது. உணர்வென்ற ஒன்று இருப்பதற்கான அறிகுறிகள் தான் இல்லை. அவளிடம் பேசுவதில் எந்தவித பயனும் இல்லை என்பதை சிவா அறிந்து கொண்டான்.
"அண்ணே, இவையளுக்கு என்ன நடந்தது? எங்க கூட்டிக்கொண்டு போறியள்? " என டிரைவரிடம் கேட்டான் சிவா.
"நேற்று வல்வெட்டிச் சந்தியில செல்லடிபட்டுச் செத்துப்போச்சுதுகள். இந்தம்மா மட்டும் தப்பிச்சிட்டா."
"இவையோட ஒரு பொம்பிளைப்பிள்ளை" சிவாவின் குரல் தழுதழுத்தது.
"அந்தப் பிள்ளையின்ர உடம்பு சிதைஞ்சு போச்சு பெட்டிக்குள்ள போட்டு வெச்சுக்கிடக்கு. இவையள சாவச்சேரிக்கு கொண்டுபோறம். போகோணும் தம்பி விடியக்கு முதல் சாவச்சேரி வந்தா பார்க்கலாம்" என்று கூறிவிட்டு காரோடு கிளம்பினார் டிரைவர்.
விடிகிற நேரம் கிருஷ்ணாவோடு அந்த சுடுகாட்டுக்குள் நின்றுகொண்டிருந்தான் சிவா. அப்போது தான் கிருஷ்ணாவுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது. அவள் மனதில் காலத்துக்கும் ஆறாத வடுவாக குற்ற உணர்வாகப் பதிந்த ஒரு நிகழ்வை எண்ணித் தன்னைத் தானே சபித்துக்கொண்டாள்.
"கொஞ்சமிருந்து அவர் வரப் பார்த்திட்டுப் போங்கோவன்"
💙✨
ReplyDeletesuch an heart touching story! can't even imagine how the real people would've felt. good job Anna👍🏻
ReplyDeleteFelt so emotional!! Good job 👏
ReplyDeleteநெஞ்சை கணக்கவைத்தது
ReplyDelete👏👏👏
ReplyDelete